மிக்கி - மௌஸ் -online

Monday, January 19, 2009

என்னது கண்டுபிடிச்சிட்டாங்களா?............


சமீபத்தில் மனிதனின் IQ-க்கு காரணமான ஜீனைக் கண்டுபிடித்துவிட்டதாக ஒரு விஞ்ஞானி கூறியுள்ளார். முதலில் IQ என்பதே சர்ச்சைக்குரிய விசயமாக இருக்கிறது. IQ டெஸ்டுகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளவனிடம் ஐஸ் ஹாக்கி விளையாட எத்தனை பேர் தேவை போன்ற கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. இப்படியான கேள்விகளுக்கு அவன் எப்படி பதில் சொல்லுவான்?. சரி, விசயத்திற்கு வருவோம். ஒருத்தர் அட அமெரிக்காவிலதாங்க, நம்ம அறிவுத்திறனுக்கு (IQ) காரணமான ஜீன் ஆறாம் நம்பர் குரோமோசோம் வீட்டில் இருப்பதாகவும் சொல்றார். அதற்கு IGRF2 எனவும் பேர் சூட்டிவிட்டர். அப்ப்டி என்னதான் பண்ணினார் அவர். ஒண்ணுமில்லைங்க, IQ 160 புள்ளிகளுக்கு மேல இருக்கிற அதிமேதாவின்னு அவங்க அவங்க ஸ்கூல்ல ஒத்துகிட்ட சுமார் 200 பேரை கூப்பிட்டு அவங்க டி.என்.ஏ வை எடுத்து ஆராய்ச்சி பண்ணிருக்கார். IQ அதிகம் இருந்த குழந்தைகளுக்கு இந்த ஆறாவது வீட்டு குரோமோசோல, நீண்ட பகுதியில் ஒரு செக்மண்ட் நீளமா இருந்ததை பார்த்திருக்கார். சரி 'அறிவுக்கு' இது தான் காரணம்னா அவங்க அப்பா, அம்மாவும், தாத்தா-பாட்டி, மாமா-மாமி இவங்களெல்லாம் அறிவாளிகளா இருக்கனுமில்ல... இருந்தாங்களான்னு பார்த்தா, அப்படி இல்லை. அது ஏன்?-ன்னு கேட்டால் விசயம் என்னவோ ஜீன் -ல தான் இருக்கு ஆனா அறிவு வெளிப்படறதுக்கு தகுந்த சூழ்நிலை வேணுமாம். அதாவது இந்த "நல்ல அறிவு ஜீன்" ஏராளமா (ஏராளமான்னா ஒண்ணுக்கு நாலு இருக்கனும்னு அர்த்தமில்ல, வளமா, தெளிவா ஒண்ணே ஒண்ணு இருந்தாலும் ஒழுங்கா இருக்கறது) ஒரு குழந்தைக்கு இருந்தாலும், அப்பா அம்மா மூலமா குழந்தைக்கு போயிருந்தாலும், குழந்தை அறிவாளியா பிறக்கறதுக்கு சூழ்நிலை வேணுமாம். முக்கியமாக குழந்தை கருவில் இருக்கும் போது நிகழும் நிகழ்வுகள் மிகப் பெரும் பங்கு வகிக்குதாம். அம்மா 'டென்சன்'-ஆனாங்கன்னா, அப்பா கூட சண்டை போட்டாலோ குழந்தையின் அறிவு பாதிக்குமாம். ஆதலால் முதல்ல நாம அறிவாளியா இல்லாட்டாலும், நல்ல அறிவாளியான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணனும். அதுக்கு IQ டெஸ்ட் வைக்கலாம், ரிட்டன் எக்ஸாம், இன்டர்வியூ, குரூப் டிஸ்கசன் எல்லாம் வைக்கறது அவங்க அவங்க சாமர்த்தியம். ரெண்டாவதாக மனைவி கர்பமாக இருக்கும் போது நீங்க பாட்டுக்கு நயன் தாராவை பார்த்து ஜொல்லு விட்டு வீட்டுக்காரம்மா BP ஐ ஏத்தக் கூடாது, குறைந்த பட்சம் குழந்தை பிறக்கும் வரைக்கும் ஒழுங்கா "மனைவியே மனம் கண்ட தெய்வம்" -ன்னு இருக்கணும். இதெல்லாம் ஏதோ அறிவுரை சொல்றதுக்காக சொல்லலை. ஆதாரம் கீழே இருக்கிற அட்டவணையில் இருக்கு. அதாவது ஒருத்தரோட ('A') அறிவுக்கும், இன்னொருத்தரோட அறிவுக்கும் ('B') எந்த அள்வு தொடர்பு இருக்குன்னு ஒரு அளவை-யை வச்சிகிட்டோம்னா,

தொடர்பில்லாத இரண்டு பேரின் IQ - 0 (அதாவது 0 % ஒற்றுமை)
ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளின் IQ (identical twins) - 86
சேர்ந்து வளர்க்கப் பட்டவர்கள்
ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளின் IQ தனித்தனியாக வளர்கப்பட்டவர்கள் - 76 (வெவ்வேறு சூழ்நிலை)
பார்க்க வேறுமாதிரி இருக்கும் இரட்டையர்கள் (fraternal twins) -55
சேர்ந்து வளர்க்கப் பட்டவர்கள்
சகோதர சகோதரிகள் - 47
பெற்றோரும் பிள்ளைகளும் - 40
கூட்டுக் குடும்பம்
பெற்றோரும் பிள்ளைகளும் - 31
பிள்ளைகள் தனித்து வளர்க்கப் பட்டவர்கள்

அதாவது identical twins 86 சதம் ஒத்துப் போவது அவர்கள் கருவில் இருக்கும் போது நடந்த சம்பவங்கள் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்ததால் தான். fraternal twins க்கு 76% ஒத்துபோவது எதனாலன்னா, ஒருத்தருக்கு 'அறிவு ஜீன்' நல்லமாதிரியும், மற்றவருக்கு ஓரளவுக்கு நல்ல மாதிரியும் வந்து சேர்ந்ததனால் தான். அந்த அறிவு ஜீன் தன் வேலையை காட்றதுக்கு நல்ல சூழ்நிலை வேணுங்கறதால, நல்ல குடும்பம், நல்ல சுற்றம் மட்டுமல்லாமல் நல்ல ஸ்கூலும் அத்தியாவசியமாகிறது. ஏனென்றால் இந்த 'அறிவு ஜீன்' வேலை செய்வது 50% பசங்களோட ஃப்ரண்ட்ஸை(peer group) பொறுத்து தான் இருக்காம். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் பிறக்கும் பசங்களின் IQ சுமார் 3 புள்ளிகள் அதிகரித்துக் கொண்டே போகிறதாம். அதனால் நம்ம பையன் (நம்மை விட) அறிவாளியா இருக்கறதுக்கு நாம மட்டும் காரணம் இல்லை, இந்த உலகமும் தான் காரணம்.
குழந்தைகள் அறிவாளிகளா வளர்றதுக்கு நல்ல ஊட்டச்சத்தும் மிகவும் அவசியம், நியூசிலாந்தில சில் குழந்தைகளுக்கு அளவிலாத புரோட்டீனும், சில குழந்தைகளுக்கு மிகக் குறைந்த புரோட்டீனும் கொடுத்து வளர்த்திலே, முதல் வகை குழந்தைகளின் அறிவுத்திறன் குறிப்பிட்டு சொல்லும்படி வளர்ந்திருந்தது (இதுக்கு பேர் "flynn effect"-டாம்). சோ, பசங்களுக்கு complan, horlicks, bournvita, viva எல்லாம் கொடுப்பது அவசியமாகிறது என்பது ஆராய்ச்சி முடிவு (ஐ ஆம் எ காம்ப்ளான் பாய் (மேன்)!)
ஒட்டி பிறந்த இரட்டையர்களை தனிதனியா பிரித்து 20 வருசம் வளர்த்ததில் அவர்கள் IQ-வில் பெரிய மாற்றம் ஏதும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆக அறிவாளியாகறதுக்கு ஜீனும் அவசியம், சூழ்நிலையும் அவசியம்.
அப்பாடா! ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு அறிவியல் பதிவு போட்ட மாதிரியும் ஆச்சு, எல்லாத்துக்கும் அறிவுரை சொன்னமாதிரியும் ஆச்சு.

Sunday, January 18, 2009

ஒரு சர்தார்ஜி பாடம் சொல்லிக் கொடுக்கிறார்..


சர்தார்ஜி, சிங் என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தாடியும், பெரிய தலைப்பாகையும் அடுத்து அவர்களின் கோமாளித்தனங்களும் தான். சர்தார்ஜி ஜோக்குகள் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலம். மிகப்பல ஜோக்குகள் படித்திருந்தாலும் நினைவில் நின்ற ஒன்று. ஒரு அறையின் மத்தியில் ஒரு கேக் வைக்கப் பட்டுள்ளது. அறையின் நான்கு மூலைகளில் முறையே ஹீமேன், ஸ்பைடர்மேன், ஒரு புத்திசாலி சர்தார் மற்றும் ஒரு முட்டாள் சர்தார் நிற்கின்றனர். ஒரு கணம் அறைவிளக்கு அணைக்கப் படுகிறது. நால்வரில் யார் போய் கேக்-ஐ எடுத்திருப்பார்கள்? என்ற கேள்விக்கு பதில், முட்டாள் சர்தார் என்பதாம். ஏனெனில் மற்ற மூன்றும் கற்பனை கதாபாத்திரங்களாம், 'புத்திசாலி சர்தார்' உட்பட. உங்களுக்கு தெரியுமா இது போன்ற பல ஜோக்குகளை உருவாக்கி உலவ விடுபவர்களே சர்தார்கள் தானென்று!.
மற்றவர்கள் நினைப்பது போலல்லாமல் அவர்கள் புத்திசாலிகள். இன்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பல சரக்கு கடைகளையும், பல்வேறு முன்னனி நிறுவனங்களையும் நிறுவி நடத்தி வருபவர்கள். இந்தியாவின் அன்னியச் செலவாணியில் கணிசமான ப்ங்குக்குச் சொந்தக்காரர்கள். சர்தார்களின் குடும்ப அமைப்பு மிகவும் வலுவானது. எப்போதும் பெரிய வீடுகளில் கூட்டுக் குடும்பமாக வாழ்பதையே விரும்புபவர்கள். பெரிய பெரிய பண்ணைகள் அமைத்து விவசாயம் செய்து வரும், வந்த பஞ்சாப் மாகானத்தைச் சேர்ந்த, இவர்கள் தான் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அதை குஷ்வந்த் சிங் (ஒரு சர்தார்) எழுதிய 'தி ட்ரென் டு பாக்கிஸ்தானி'-ல் படிக்க காணலாம். இவரின் 'ஜோக் புக்' -ம் மிக பிரபலம்!.
சர்தார்கள் தைரியசாலிகள். இமயமலையின் இடுக்குகளில் பத்ரிநாத்துக்கு அருகில் இருக்கும் 'ஹேம்-குன்ட்' சர்தார்களின் புனிதத் தலம், நமக்கு திருப்பதி போன்று. அதன் தரிசனக் காலங்களில் பஞ்சாப், சண்டிகர் மாநிலத்தில் பதிந்த வாகனங்களை உத்ரான்சலில் உள்ள இந்த தலத்துக்கு போகும் வழியெங்கும் வெகுவாக காணலாம். சுமார் 3 நாள் பிடிக்கும் இந்த பயணத்திற்கு பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகனங்களில் இரண்டிரண்டு பேராக போவதையே விரும்புகிறார்கள். இந்த பயணத்தின் போது வழியில் உணவருந்த உணவகங்களை (லங்கர்) சர்தார்களே உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அசோகர் செய்தது போல. அங்கு சென்று உணவருந்திவிட்டு பணம் கொடுக்க வேண்டியதில்லை. அங்கே ஒருசாமி படத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் தட்டில் காணிக்கையை போட்டுவிட்டு வந்தால் போதும். வழியெங்கும் உணவகம் அமைத்திருப்போர் மிகவும் அன்புடன் உணவருந்த அழைக்கின்றனர். யாரும் சாப்பிட்டுவிட்டு பணம் போடாமல் போவதில்லை என்பது குறிப்பிட வேண்டிய விசயம். நம்ம ஊராக இருந்திருந்தால் ஒரு கடை போட்டு, இரண்டு இட்லி ஒரு வடை, இருபத்தைந்து ரூபாய்க்கு விற்றிருப்போம்.
இமயமலைப் பயணத்தில் நிலச்சரிவு என்பது மிகவும் சகஜம் அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம். மலையிருந்து கல்லும், மண்ணும் ரோட்டில் சரிந்து பாதையை மூடிக்கொள்ளும். அப்படிபட்ட தருனங்களில் பயண போக்குவரத்து நாட்கணக்கில் கூட தடைபட்டுவிடும். அப்படிபட்ட ஒரு தருனத்தில் மாட்டிக் கொண்ட போது தான் அதை பார்க்க நேர்ந்தது. சுமார் நூற்றைம்பது வண்டிகள் தடையின் இருபுறமும் நின்றிருக்க இருசக்கர வாகனங்களில் வந்த சர்தார்கள் இருபது பேர் கலத்தில் இரங்கி வேலை செய்ய ஆரம்பித்தார்கள். வழியில் ரோட்டின் குறுக்கே ஓடிய ஒரு ஓடையில் நிலச்சரிவு நிகழ்ந்திருந்தது. பெரும்பாலும் இந்தொ-திபெத்திய எல்லை படை (ITBP) அல்லது GREF-லிருந்து ஆட்கள் வந்து புல்டோசர்களின் உதவியுடன் தடையை அப்புறப்படுத்தினால் மட்டுமே பயணத்தை தொடரமுடியும்.
ஆனால் இவர்கள் மூன்று மணிநேரத்தில் ஒருவாறு சரிசெய்து இரு சக்கர வாகனங்கள் போகுமாறு வழி செய்திருந்தார்கள். அதை மேலும் சரிசெய்து சிறிய கார்கள் போகும் வண்ணம் செய்துவிட்டு பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டு, அவர்களுக்காக மற்றவர்கள் கைதட்டியதையும் கண்டுக் கொள்ளாமல் போய்க் கொண்டிருந்தார்கள்.
எப்போதோ படித்த ஒரு கதை நியாபகம் வருகிறது. தென்னிந்தியாவிலிருந்து, வடக்கே சுற்றுலா போன மூன்று நண்பர்கள், டில்லியை சுற்றிப் பார்க்க ஒரு காரை வாடகைக்கு எடுத்தனர். காரின் ஓட்டுனராக வந்தவர் ஒரு சர்தார். வழிமுழுவதும் அவரை வெறுப்பேத்தும் வண்ணம் சர்தார் ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தனர் நண்பர்கள். பயண முடிவில் அவருக்கு வாடகை கொடுக்கும் போது, டிரைவர் ஒரு ரூபாயை நண்பர் கையில் கொடுத்து விட்டு சொன்னாராம், "நீங்கள் பார்க்கும் முதல் சர்தார் பிச்சைக்காரனுக்கு இதை கொடுத்து விடுங்கள்" என்று. அப்போது "சரி" என்று சொல்லி நண்பரும் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் வாங்கிக் கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அவரால் ஒரு சார்தார் பிச்சையெடுப்பதையும் பார்க்க இயலவில்லை. சர்தார்கள் கடும் உழைப்பாளிகள். இந்தியாவில் அதிகபட்ச ட்ரக்குகளை ஓட்டுபவர்கள் அவர்கள் தான். அதன் விளைவுதான் நம்மூர் சாலையோர 'பஞ்சாபி டாபா'க்கள். இன்றைக்கும் சீக்கிய கோவில்களில் உணவு இலவசம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்களாகவே சென்று உணவு தயாரித்து கொடுப்பார்கள். இதை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இன்றும் இராணுவத்தில் மிக மிக அதிக அளவில் சீக்கியர்களை காணலாம் (தற்போது பணிமூப்பு பெற்ற இராணுவ தளபதி JJ சிங் ஒரு உதாரணம்). மேலும் இராணுவ வீரர்களுக்கு தங்கள் பெண்னைக் கட்டிக் கொடுப்பதை ஒரு பெரிய கௌரவமாக கருதுகின்றனர். (நம்மூரில் மிலிட்டரில இருக்கற ஒருத்தருக்கு பொண்ணு கிடைக்கறதுக்குள்ள 'தாவு' தீந்துறுது). இவ்வளவு ஏன் நம்மை ஆள்பவரே ஒரு சர்தார் தானே!. அவரின் பெருமை எழுத ஒரு பதிவு போதாது. அடுத்த முறை சர்தார்ஜி ஜோக்கை படிக்கும் போது, சொல்லும் போதும் நினைவில் கொள்க சர்தார்கள் புத்திசாலிகள் நம்மைவிட.

Wednesday, January 14, 2009

தேவை......


காற்றில் கதைசொல்லும் நீலத் தாவணி,
தலையாட்டும் வெள்ளைப் பாவாடை !,
நகப்பூச்சு கைக்கு நாள்முழுவதும் வேலை தரும் பின்னல்சடை,
உச்சி வகிடில் சிக்காத ஓரிரு முன்முடிகள் !,
பெண்மையின் கண்மை,
கண்-மையின் கீழ் பேசும் விழிகள் !,
விழி பேசும் மொழி பழகும் நெற்றிப் பொட்டு,
பொட்டுக்கு துணை போன விபூதி !,
பெண்மையின் பெருமை சொல்லும் மல்லிகைப்பூ,
பூவின் இருக்கையான வெள்ளிக் கிழமை ஈரக் கூந்தல் !,
ஈரக்கூந்தல் எட்டித் தொடும் உதடுகள்,
உதடுகளிடை விளையாடும் ஒற்றைவட செயின் !,
செயினூடே நீந்தும் ஜோடி அன்னங்களின் டாலர்,
கூந்தல் முடியுடன் கூடி விளையாடும் தோடுகள் !,
காதணிகளுக்காக சொற்பொழிவாற்றும் கைவளைகள்,
வளையல்கள் வாய்ப்பாட்டுக்கு பக்க வாத்தியமான கொலுசுகள்.....

தலைக் கோதும் வாஞ்சை,
முகம் கவிழும் வெட்கம் !,
இதழ் பூக்கும் புன்னகை,
கண்களில் இழையோடும் பாசம் !,
சத்தமில்லாத சிரிப்பு,
எப்போதோ வரும் வருத்தம் !,
எப்போதும் வராத கோபம்,
என்றாவது வெளிப்படும் ஏமாற்றம் !,
என்றுமே விலகாத பொறுமை!,
எனத் தேவைகளின் பட்டியல் முடிவுறாமல் நீண்டுக் கொண்டே போகிறது.
இறைவா, உனக்கு இரக்கமே இல்லையா, நான் கேட்பதெல்லாம், இவற்றில் இருபது சதம் இருக்கிற ஒரு தமிழச்சியை தானே! அவளை எனக்கு காட்டுவதில் உனக்கு ஒரு சதம்கூட இஷ்டமில்லையா....................

குறிப்பு - இந்த இடுகை முழுவதும் காலத்தால் அழியும், நிலையில்லாத உடல், உருவம் மற்றும் நிறம் போன்ற குணநலன்களைத் தவிர்த்து வந்திருக்கிறேன்,

Sunday, January 11, 2009

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - பாகம் II


பஸ் ஸ்டாண்டில் சோடியம் ஆவி விளக்குகள் மஞ்சள் வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தன. ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கி டிரைவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தேன். ஒரு சாக்கடையை தாண்டி, ஒரு பேப்பர் கடையில் வெளியே தொங்கிக் கொண்டிருந்த விளம்பரத்தில் 'அமைச்சர் இன்று வருகை'-யை படித்தவாறு கடந்துச் சென்றேன். வழித்தடத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்களின் வாசனை இனிமையாக வந்துக் கொண்டிருந்தது. பலூனில் செய்யப்பட்ட குரங்கு, நாய் முதலியவை ஒரு குச்சியில் தொங்கிக் கொண்டிருந்தன. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தேன். பேருந்துக்கு இன்னும் சமயமிருந்தது. வழிக்கடையில் ஒரு ஆனந்த விகடன், ஒரு குமுதம் மற்றும் ஒரு குங்குமம் வாங்கிக் கொண்டேன். ஏனெனில் போகுமிடத்தில் இவை கிடைக்க வாய்ப்பில்லை.
இடம் - சேலம் பேருந்து நிலையம்.
காலம் - 2004ல் ஒரு அக்டோபர் மாதம் இரவு 0830 மணி.
குருவாயூர் போகும் விரைவுப் பேருந்து புறப்பட தயாராக இருப்பதாக ஒலிப் பெருக்கியில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். சரியான நேரத்திற்கு வந்து விட்டேன். பஸ்ஸில் ஏறி மத்திய பின் சீட்டில் சன்னலோரமாக உட்கார்ந்துக் கொண்டேன். பேருந்து காலியாக இருந்தது. நாலைந்து பேர் உட்கார்ந்துக் கொண்டிருந்தனர் அவ்வளவு தான்!. உள்ளே ஏறி வந்த கண்டக்டர் வெறுப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு, டிரைவரிடம்,
"நீ பஸ்ஸை எடுப்பா, வழியிலே வந்தா ஏத்திக்கலாம்"
டிரைவர் வந்து பஸ்ஸை ஸ்டார்ட் செய்தார். அப்போது தான் கவனித்தேன் என் சீட்டுக்கு எதிர்புறம் இருந்த சீட்டில் ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் உட்கார்ந்திருந்தார். வாரக் கணக்கில் ஷேவ் செய்யாத தாடி, கருத்து தாடை எலும்புடன் ஒட்டிப் போயிருந்த தாடைகள், சுருங்கிய தோல், பாதி நரைத்த முடி, வெள்ளை நிற சட்டை, கந்தலான வெள்ளை 4 முழ வேட்டியணிந்திருந்தார். உரப்பையினாலான கைப்பை வைத்திருந்தார். கண்களில் வெறுமையும் ஒருவித அச்சமும் தெரிந்தது. பேருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் கண்டக்டர் என்னிடம் வந்தார்.
"எங்கே போகணும்?"
"திருச்சூர்"
"135 ரூபாய்"
கொடுத்தேன். பின் அந்த பெரியவரிடம் திரும்பினார். அவர் குரல் தோனி வேறுவிதமாக மாறியிருந்தது.
"எங்க போற?"
"அங்கமாலி"
"150 ரூபாய்"
"அது வந்து........ 130 ரூபா தான் இருக்குதுங்க"
"அப்போ பாலக்காடு வாங்கிக்க"
"இல்லை, அவ்ளோதான் குடுத்தாங்க"
"சீக்கிரம் சொல்லு, பாலக்காடு வாங்கிக்கறயா? இல்ல இறங்கிக்கறயா?" கண்டக்டர் பெரியவரை மிரட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் பணம் இல்லையென்பது அவர் கண்ணிலேயே தெரிந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நான் கண்டக்டரிடம்,
"எவ்ளோ கம்மியா இருக்குங்க?"
"இருபது ரூபாய். ஏன் கொடுக்க போறீங்களா?"
"சரி. நான் கொடுக்கறேன், இந்தாங்க"
என்னை பார்த்த பெரியவரின் பார்வையில் ஒரு வாஞ்சையிருந்தது, "ரொம்ப நன்றி தம்பி"
"பரவாயில்ல, ஐயா எங்க போறீங்க?"
"அங்கமாலி"
கேரளாவிற்கு, முதுநிலை படிப்புக்காக போயிருந்த எனது இந்த இரண்டு வருட அனுபவத்தில் அங்கே நிறைய தமிழர்களை பார்த்திருந்தேன். அவர்கள் பெரும்பாலும் பழைய பேப்பர்களை சேகரித்துக் கொண்டும், ரோடு போட்டுக் கொண்டும் இருந்தனர். இரவுப் பொழுதுகளிலும், மழைக்காலங்களிலும் அவர்களை, பெரும்பாலும் இளைஞர்களை, கடைகளின் முன்புறம் பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்களிடம் பேசத் துணிந்ததில்லை. இப்போதுதான் இவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
"அங்கமாலியில என்ன பண்றீங்க, யார் இருக்கா?"
"யாருமில்ல, இப்போதான் கூலி வேலைக்கு போறேன்"
"பின்ன எப்படி போய் வேலை செய்வீங்க?"
"ஒருத்தர் போன் நம்பர் இருக்கு. அங்க போய் போன் பண்ணா அவர் வந்து கூட்டிப் போவார்"
"போன் பண்ண பணம் வச்சிருக்கீங்களா?"
"ம்........"
"இந்தாங்க வச்சிக்கங்க"
"இல்லை வேணாம்"
"பரவாயில்லை வச்சிக்கங்க, சொந்த ஊர் எது?" கொஞ்சம் பணத்தை அவர் கையில் திணித்து விட்டு கேட்டேன்.
"சங்ககிரி"
"பின்ன ஏன் அங்க போறீங்க?"
"விவசாயம் நொடிஞ்சு போச்சு. தரியும் சரியா ஓடறதில்லை. வாங்கன கடனுக்காக நிலத்தையும் கொடுத்துட்டேன். என்ன பண்றது குடும்பத்த காப்பாத்தனுமில்ல"
"சரி கூலிவேலை செய்யனும்னு முடிவு செஞ்சுட்டா... இங்கயே செய்யலாமில்ல?"
"இங்க ஒரு நாளுக்கு 60 - 70 ரூபா தான் தர்றாங்க. அங்க நாளைக்கு 150 தர்றாங்க"
"ஓஹோ, எங்கே தங்குவீங்க?"
"பகல்ல கூலி வேலை பார்ப்போம். ராத்திரியில் ஏதாவது கடையில நைட் வாட்ச்மேன் வேலை"
"தூங்கறது?"
"நேரம் கெடைக்கும் போது கடையிலேயே வெளிய படுத்துக்க வேண்டியது தான்"
"அதுக்கு எவ்ளோ தருவாங்க?"
"மாசம் 1500 ரூபாய்"
"எப்போ ஊருக்கு போவீங்க?"
"வருசம் ஒருமுறை, இல்லைன்னா ஆறு மாசத்துக்கு ஒருமுறை. பெரும்பாலும் பணத்தை மணியாடர் பண்ணிருவோம்"
"சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க"
"ம்........" அவர் கண்களில் ஒரு ஆறுதலும், கொஞ்சம் மிரட்சியும் மிச்சமிருந்தன. பேசிக் கொண்டிருந்த சற்று நேரத்திற்கெல்லாம் அவர் தூங்கிவிட்டார். நான் உறக்கம் வராமல் சன்னல் வழியே வெளியே வெறித்துக் கொண்டிருந்தேன்.........................................................நெடு நேரத்திற்கு.

பி.கு - எனது நோக்கம் இவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்?, முல்லைப் பெரியார் அணையிலும், காவிரியிலும் தண்ணீர் வராததுதான் காரணமா? என அலசுவது அல்ல. இவர்களை பதிவு செய்ய வேண்டும் அவ்வளவே!. காரண காரியங்களும், அவற்றுக்கான தீர்வுகளும் ஆளும் மற்றும் ஆளப்போகும் அரசியல்வாதிகளுக்கும், உண்மையிலேயே ஆளும் அதிகாரிகளுக்கும் (bureaucrats) தெரிந்திருக்க கூடும்.

திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு - பாகம் I


இடம் - மௌ, இந்தூர், மத்திய பிரதேசம்.
காலம் - 2009-ன் முதல் மாலை நேரம்.
இப்போது தான் இருட்டியிருந்தது. மேற்கு வானத்தில் 'விடி'வெள்ளியும், நடுவானத்தில் பெயர் தெரியாத நட்சத்திரமும் பளபளப்பாக தெரிந்தன, மற்ற நட்சத்திரங்கள் தூங்கி எழுந்த குழந்தைபோல, கண்களை கசக்கிக் கொண்டு வர ஆரம்பித்திருந்தன. பச்சை நிற ஜிப்சி வண்டிகள் பறந்துக் கொண்டிருந்தன. இடையே சிகப்பு விளக்கை எரிய விட்டவண்ணம் சில கருப்பு நிற கார்கள் சத்தமில்லாமல் கடந்துச் சென்றன. அவற்றின் முன்புறம் எண்பலகை இருக்க வேண்டிய இடத்தில், சிகப்பு பின்னனியில் தங்கநிற நட்சத்திரங்கள் மின்னின. வெள்ளை உடையில், சிவப்பு தொப்பியணிந்த இராணுவ போலீஸ்காரர் பலமாக காலை அடித்து வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். போவது பிரிகேடியரகவோ, மேஜர் அல்லது லெப்டினட் ஜெனரலாகவோ இருக்கலாம். சில குண்டான பெண்கள் நடந்துக் கொண்டும், சிலர் மெல்லியதாக ஓடிக்கொண்டும் இருந்தனர். சிறுவர்கள் சைக்கிளை உருட்டிக் கொண்டு வேகமாகச் சென்றனர். முழுவதும் வெள்ளை உடையணிந்த ஒருவர் சுமார் இருபது இராணுவ வீரர்களை ஒத்திசைவாக ஓடவைத்துக் கூட்டிச் சென்றுக் கொண்டிருந்தார். வழியிலிருந்த கேட்டில் இராணுவ உடையணிந்த இருவர் கையில் INSAS 5.6 ரைபிலுடன் முறைத்து பார்த்தனர். சற்றே உற்று நோக்கினால் ரைபில்களில் குண்டுகள் லோடு செய்யப் பட்டவை எனத் தெரிந்தது. அலுவலக வேலையாக 'மௌ' வந்திருந்த போது 'பானி பூரி' சாப்பிட ஆசைவந்து ரோட்டில் இறங்கி அலைந்து திரிந்த போது தான், நான் சுற்றுவது ராணுவ கண்டோன்மன்ட் ஏரியா என்பதை அறிகுறிகள் சற்று பலமாகவே தெரிவித்தன.

வழக்கமாக தடுக்கி விழும் இடமெல்லாம் இருக்கும் பானி பூரி வண்டிகள் இன்று ஒன்று கூட தென்படவில்லை. அருகிலிருந்த மார்கெட் முழுவதும் தேடிக் கொண்டே சுற்றிய போது ஒரு வண்டியில் தோசைபோல எதையோ ஒருவர் செய்வதைப் பார்த்தேன். 'நான் காண்பது கனவா? என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லையே! ஆமாம், தோசையே தான்'. பல நாள் 'வறண்ட ரொட்டி'யும் 'வறுத்த உருளை'க் கிழங்கும், வெங்காயமும் தின்று நொந்த எனக்கு, 'தோசை' திருப்பார்க் கடலில் கடைந்தெடுத்த தேவாமிர்தம் போல இருந்தது. அதுவும் சாம்பார், தேங்காய் சட்னி மற்றும் தக்காளிச் சட்னி, தமிழ் நாட்டில் சாப்பிட்ட அதே காம்பினேசன். அடடா, வாயைத் திறந்தால் வழிந்தோடிவிடும், எனவே விழுங்கிவிட்டு சொன்னேன்...
"பாயி, தோ மசாலா தோசா தேனா, ஜல்தி"
"தோ மினிட் ரோக்னா, அபி தையார் ஹோ ஜாயேகா" என பதில் வந்தது.
நீல மற்றும் வெள்ளை நிற கோடுகள் போட்ட அரைக் கைச்சட்டை, கருத்த உடல், சராசரி உயரத்துடன் ஒருவர் தோசைமாவை வண்டியிலிருந்த சூடான தோசைக்கல்லின் மீது ஊற்றிக் கொண்டிருந்தார். இப்போது தான் சாப்பிட்டு எழுந்த ஒரு முஸ்லீம் பாய் ஒருத்தர், பைஜாமா பாக்கெட்டில் கைவிட்டவாறு,
"எவ்வளவு ஆச்சுப்பா " என்றார்.
"பதினஞ்சு ரூபாய் கொடுங்கண்ணே"
ஒரு கணம் என் தலை சுற்றியது. சத்தியமாக நான் கேட்பது 'தங்கத் தமிழே' தான். யாராவது என்னைப் பிடித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் போலிருந்தது. இன்று காலையில் யார் முகத்தில் முழித்தேன் என நினைத்துக் கொண்டும், ஒரு நிமிடம் அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவித்து விட்டு கேட்டேன்....
"தமிழா?"
"ஆமாம்"
"எந்த ஊர்?"
"மறந்துட்டன்"
அவர் 'மருத' என்றது எனக்கு, 'மறந்துட்டேன்'-ங்கற மாதிரி கேட்டது. ஒரு வேலை தோசை-மயக்கமாக இருக்கலாம்.
"நல்லது" சிறிது நேரம் கழித்து அவர் பேச விருப்பம் காட்டாவிட்டாலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
"வந்து எத்தனை வருசமாவுது?"
"ரெண்டு வருசம்"
"ரெண்டு வருசத்துக்குள்ளே ஊரை மறந்துட்டீங்களா என்ன?"
"என்ன மறந்துட்டீங்களா?"
"இல்லை, நான் முன்னே சொந்த ஊர் கேட்டப்போ மறந்துட்டேன்னு சொன்னீங்களே"
"நான் மருத-ன்னேன். உனக்கு மறந்துட்டேன்-ன்னு கேட்டுச்சா?" மெல்லிதாக சிரித்தார்.
"ஆமாம். தனியாவா இருக்கீங்க..?"
"இல்ல என் அண்ணன் கூட இருக்கார். இவர் தான் .." தன்னுடன் வேலை செய்துக் கொண்டிருந்தவரை கைகாட்டினார். உடன் என்னுடைய தோசையையும் கையில் திணித்தார்.
கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, "ம்..... நல்லாயிருக்கு, அப்படியே நம்ம ஊர் தோசை மாதிரியே"

"இல்லேன்னா இங்க வந்து பொழப்பு நடத்த முடியுமாண்ணே?"
"எப்படி இவ்ளோ தூரம் வந்தீங்க?"
"எங்க பெரியப்பா மகன் இந்தூரில கடைவச்சிருக்கார். அப்படியே நாங்களும் வந்துட்டோம்"
"அவர் தான் உங்களுக்கு கடை போட ஐடியா கொடுத்தாரா? வியாபாரம் எப்படி போகுது?"
"ஆமாம், பரவாயில்லை பக்கத்திலயே ஆர்மி ஏரியா இருக்கறதால நெறைய தமிழ் ஆளுங்க வருவாங்க. அவங்களால தான் இங்க கடை போட்டிருக்கோம்".
நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு வடக்கத்திய இளம் பெண் தன்னுடன் வந்திருந்தவனிடம், 'டோண்ட் டிரிங்க் த வாட்டர்" எனச் சொல்லிக் கொண்டிருந்தாள், அதற்குள் அவன் தண்ணீர் குடித்து விட்டிருந்தான்.

"ஓஹோ! எங்கே தங்கி இருக்கீங்க?"
"இங்க தான் ரூம் வாடகைக்கு எடுத்திருக்கோம். பின்ன சொந்த வீடா வாங்க முடியும்?"
"அதனாலென்ன, இன்னும் கொஞ்சநாள் போனா வாங்கிடலாம். கல்யாணம் ஆயிடுச்சா?"
"இன்னும் இல்லை"
"எப்போ ஊருக்கு போனீங்க?"
"நான் போய் ஒரு வருசமாகுது, தம்பி ஆறுமாசம் முன்னாலதான் போயிட்டு வந்தான்."
"வருசம் ஒரு முறைதான் போவீங்களா?"
"ஆமாம் ஊருக்கு போய் என்ன பண்றது?"
"அது சரி. எவ்ளோ ஆச்சு?"
"முப்பது ரூபாய்ங்கண்ணே"
"இந்தாங்க, உங்க பேரை சொல்லவேயில்லையே?"
"என் பேரு லட்சுமணன். அண்ணன் பேர் சிவராமன்"
பேருக்கு ஏத்தமாதிரியே இருக்கீங்க, அவங்க வனவாசம் 14 வருசம், உங்க வனவாசம் எத்தனை வருசம் கழிச்சு முடியப் போகுது? அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அப்பாவுக்கு கேன்சர், அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும்னு அவங்களுக்கும் ஒரு சோகப் பின்னனியிருக்கலாம். அதை தெரிந்துக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஏன் விருப்பம் இல்லை என பாகம் II ல் சொல்றேன்.
"அப்போ சரி, பார்க்கலாம்"
"சரிங்கண்ணே"

Thursday, January 08, 2009

ஒரு விளையாட்டு மைதானம்...

மெயின் ரோட்டிலிருந்து பக்கவாட்டில் உள்ளே செல்லும் ஐந்தடியில் ஒரு குறுக்குச் சந்து. ஒரு நேரத்தில் ஒரேயொரு பைக் மட்டுமே போக முடியும். இரண்டு வண்டிகள் வரநேர்ந்தால் ட்ராபிக் ஜாமாகிவிடும். யாராவது வீட்டின் வெளியே வண்டியை நிறுத்திவிட்டு போய்விட்டால் ஹார்ன் அடித்தோ அல்லது காலிங் பெல் அடித்தோ அவர்களை வெளியே கூப்பிட்டு வண்டியை நகர்த்திவிட்டு மட்டுமே போகமுடியும்.
அப்படி பட்ட தெருவில் இருந்துக் கொண்டு கபில்தேவ் கனவுடன் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் நாங்கள். 1983ல் இந்தியா வென்ற உலகக்கோப்பையின் மயக்கம் இன்னும் தெளிந்திருக்கவில்லையாதலால் எங்களின் கிரிக்கெட் விளையாடும் வேகம் குறையவில்லை. பெரும்பாலான் நேரங்களில் எங்களின் குறுகலான தெருவில் துடைப்பங் குச்சிகளை ஸ்டம்பாக வைத்துக் கொண்டுத் தான் எங்களின் கிரிக்கெட் விளையாட்டு இருக்கும். இதில் வழியில் போய்வரும் வாகனங்கள் மட்டுமல்லாது போவோரும் வருவோரும்கூட தொந்தரவாக இருப்பர். விடுமுறை நாட்களில் நாங்கள் பேட்-பாலுடன் வெளிப்பட்டால், அனைத்து வீட்டாரும் "வந்துட்டாங்கய்யா......வந்துட்டாங்க." ரேஞ்சில் உள்ளே ஓடிப்போய் கதவு சன்னல் எல்லாம் மூடிக்குவாங்க. அந்த ஐந்தடி சந்தில் கிரிக்கெட் விளையாடி சிக்சர், பவுன்சர் எல்லாம் அடிக்க முயற்சி செய்துக் கொண்டிருப்போம். மொத்த ப்ளேயர்களின் எண்ணிக்கை எப்போதும் ஐத்தைத் தாண்டியதில்லை. நாங்கள் அடிக்கும் பந்துகள் வாரத்திற்கு இரண்டு மூன்று சன்னல் கண்ணாடிகளையும் (சன்னல் மூடியிருந்தால்), சில பல பாத்திரங்களையும் (திறந்திருந்தால்) பதம் பார்க்கும். பெரும்பாலும்,
"இருடா, உங்க அம்மாகிட்ட சொல்றேன், போய் பாலை எடுத்துட்டு போ....ஆனா இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கனும்" என எச்சரித்துவிட்டு அனுப்பி விடுவார்கள் பெரும்பாலான தெரு ஆன்டிகள்.
நம்மளும், "சாரி ஆன்டி, இந்த ஒருமுறை விட்ருங்க, அடுத்த முறை 'பால்' வந்தால் நீங்களே வச்சிக்கங்க, அம்மாகிட்ட சொல்லாதீங்க ப்ளீஸ்" னு சொல்லிட்டு வந்துருவோம். சொல்லி வைத்தாற் போல் அடுத்த அரைமணி நேரத்தில் அவங்க வீட்டு பூஜை அறையிலோ, சமயலறையிலோ பந்து போயிருக்கும். இம்முறை மன்னிப்பு கிடைக்காது என தெரிந்தவுடன், பந்து விழுந்த அடுத்த நொடி அனைவரும் 'அப்பீட்டு' ஆயிருப்போம்.
"டேய்! அந்த ஆன்டி வந்து கேட்டால் யாரும் வாயை திறக்க கூடாது"
"டேய் நீதான 'பால்' அடிச்ச, நாளைக்கு வேற வாங்கிட்டு வந்திரு என்ன? இன்னைக்கு எல்லோரும் போயிருங்க, சீக்கிரம்" னு சொல்லிட்டு மாயமாயிருப்போம்.

அப்பறம் அந்த ஆன்டி வெளியே வந்து பாத்துட்டு, கன்னா பின்னான்னு அர்ச்சனை பண்ணிட்டு போயிருவாங்க. பின் எப்படியோ அம்மாவுக்கு விசயம் தெரியவர அன்னைக்கு சாயந்தரம் வீட்டில் 'பூஜை' நடக்கும். பிறகு ரெண்டு நாளுக்கு கிரிக்கெட்டை மறந்துட்டு கோலி, கில்லி என விளையாடுவோம். அடுத்த வாரம் விக்கிரமாதித்தன் வேதாளத்தின் கதைதான். மீண்டும் எங்கள் படை கிரிக்கெட் களத்தில் இருக்கும். இந்த முறை பந்து போய் விழுந்தது ஒரு ஸ்கூல் டீச்சர் வீட்டில். மிகவும் ஆபத்தான் இடம், அவர் வீட்டில் ஆளுயரத்துக்கு, எங்களைவிட உயரமாக ஒரு அல்ஷெசன் நாய் இருந்தது. அதனால் யாருக்கும் தெரியாமல் போய் பந்து எடுத்துவர முடியாது. அதன் பெயர் ரோசி, ரோசிக்கு எங்களிப் பார்த்தால் ரொம்ப இஷ்டம், வழக்கத்தைவிட உச்ச சுதியில் குலைத்து டீச்சரை கூப்பிட்டு விடும். இப்படியிருந்ததால் வீட்டுக்குள் போகாமல் வெளியே நின்றுக்கொண்டு "ஆன்டி ஆன்டி" என ஆண்டிக் கணக்காக கத்திக் கொண்டிருப்போம். இம்முறை பந்து விழுந்த இடம் அவர்கள் சமயலறை என்பதால் ஆன்டி தானாகவே பந்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.
" அடடா! என்னே ஓரு உயர்ந்த உள்ளம் , தானே எடுத்துட்டு வந்து தர்றாங்க" ன்னு நாங்க பேசிட்டு இருக்கும் போதே, அடுத்த கையில் அரிவாள்மனை இருந்ததை கவனிக்க தவறிவிட்டிருந்தோம். வெளியே வந்தவர், எங்களை நன்றாக அர்ச்சத்திததுடன், பந்தை இரு துண்டுகளாக்கி கண்முன்னே வீசிவிட்டு போய்விட்டார். எதிர்த்த வீடுதான் எங்களது, சத்தம் கேட்டு அம்மாவும் வெளியே வந்து பார்த்துவிட்டதால், வழக்கமாக மாலையில் நடக்கும் பூஜை அன்று காலையிலேயே நடந்தது. கண்கள், முகமெல்லாம் வீங்கியிருந்த அன்று மாலையே வேறு பந்து வாங்கி வந்தாகிவிட்டது. ஒரு ஏப்ரல் மாதத்தின் விடுமுறை நாளொன்றில் இப்படி அடிக்கடி பந்து வாங்கிவருவது பட்ஜட்டுக்கு கட்டுப்படியாகாது என்பதால் வேறு வழி செய்ய வேண்டும் என எங்கள் வீட்டு காம்பௌன்ட் சுவரின் மீது நடந்த கூட்டத்தில் ஏகமனதாக முடிவானது. வேறு என்ன செய்ய முடியும்?. எங்கள் வீட்டை ஒட்டினாற் போல் சுமார் இரண்டாயிரம் சதுர அடியில் ஒரு நிலம் இருந்தது. எப்போதோ பேஸ்மன்ட் போட்டுவிட்டு, வீடு கட்டாமல் விட்டிருந்தனர். அங்கே முட்செடிகள் மண்டிக் கிடந்தன. அங்கே பாம்புகள் கூட பார்த்திருந்தோம். சில வீடுகளின் சாக்கடை நீர் அங்கே பாய்ந்துக் கொண்டிருந்தது. அந்த நிலத்தை சரிசெய்து அங்கே கிரிக்கெட் விளையாடுவது என முடிவானது. இரண்டு அரிவாளையும், சில குச்சிகளையும் வைத்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்ய முற்பட்ட போது எங்களை ஊக்குவிப்போர் யாருமில்லை மாறாக,
" உனக்கு ஏன் இந்த வேலை? ஏதாவது பூச்சியிருந்து கடிச்சு வைக்கப் போகுது" போன்ற அறிவுரைகள் வந்து விழுந்தன. நல்ல வெயில் காலமாதலால் முட்செடிகள் காய்ந்து போய் கிடந்தன. எனவே ஒரு சுபயோக சுபதினத்தில் அதை கொளுத்தி விடுவதென காம்பௌன்ட் கான்பரன்ஸில் முடிவானது. மண்ணென்னையும் தீப்பெட்டியும் எனது உபயம். அம்மாவுக்கு தெரியாமல் கடத்திக் கொண்டு வந்தாகிவிட்டது.

ஒரு நண்பனின் உதவியுடன் பற்றவைத்தாகிவிட்டது. மள மளவென பரவிய தீ கொளுந்துவிட்டு எரிந்தது. தீயில் பக்கத்துவீட்டு தென்னை மர ஓலைகளும் தீப்பற்றிக் கொண்டன. எங்கள் வீட்டுச் சுவரில் கரி அப்பியது. அந்த பக்கமாக வந்த TV வயர் எரிந்து கம்பிகள் வெளியே தெரிந்தன. பின்வீட்டு ஓடுகள் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறின. அது ஒரு ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால் தெருவில் குடியிருந்த அனைத்து வீட்டாரும் மதிய தூக்கத்தை விட்டு விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுக்கும் மேலாக விட்டால் அப்பறம் ஒருவீடும் தேறாது என முடிவு செய்து நாங்கள் பற்றவைத்த தீயை எங்களை வைத்தே அணைத்தனர். அந்த காரியத்தைச் செய்தது நாங்களாகத் தான் இருக்கும் என்ற ஐயம் எல்லோருக்கும் மனதில் இருந்தபோதும், "வெயிலுக்கு தானாக தீப்பற்றியிருக்கும்" என அவிழ்த்து விட அனைவரும் அடிக்கும் வெயிலில் அந்த அனலின் பக்கம் நின்று விவாதிக்க விருப்பமில்லாமல் தத்தம் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். தீயின் விளைவாக எப்போதோ காணாமல் போயிருந்த ஐந்து பந்துகள் மீண்டும் காட்சித் தந்தன, அதில் மூன்று கருகிபோயிருந்தன, கொஞ்சம் மண்ணென்னை, நாலைந்து தீக்குச்சி முதலீட்டுக்கு நிகர லாபம் இரு பந்துகள். அன்று எப்படியோ ஆயுதபூஜையிலிருந்து தப்பித்தாகிவிட்டது.

தெளிவுரை : அர்ச்சனை - திட்டு, பூஜை - அடி உதை, ஆயுதபூஜை - தோசைக் கரண்டி, மத்து,குச்சி போன்ற ஆயுதங்களை பிரயோகித்து பூஜை செய்வது.

Tuesday, January 06, 2009

அசினும் நானும் அப்பறம் ஆங்கில இலக்கியமும்...

நமக்கும் அசினுக்கும் உள்ள சம்பந்தம் குறித்து பிறகு சொல்கிறேன். முதலில் நமக்கும் ஆங்கில இலக்கியத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்பது பறவைகள் பலவிதம் 4 - அஸிஸ்டன்ட் 'ஐயா', என் முதல் அனுபவம் !! ஆகிய முன்னிரு பதிவுகளில் இருந்து தெரிந்திருக்கும்.கல்லூரிக் காலத்தில் வெளிநாட்டு ஆசை தலைதூக்க, அமெரிக்கா போகும் ஆசையோடு அமெரிக்க கொடியில் செய்த T-சர்ட் போட்டுக் கொண்டும், BARRONS GRE புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டும் சுற்றிக் கொண்டிருந்தோம். ஒரு அம்மாவாசையுடன் கூடிய நல்ல நாளில் ஆங்கில இலக்கியம் படிப்பதன் மூலம், ஆங்கில அறிவு வளரும் என ஒரு பொறியியல் படிக்கும் பையன் சொல்லி வைக்க, ஆங்கில இலக்கியம் படிக்கும் ஆர்வம் மேலோங்கி வளர்ந்தது. எமக்கு தெரிந்த ஒரேயொரு ஆங்கில இலக்கியவாதி ஷேக்ஸ்பியர் தான். எனவே நமது ஆங்கில இலக்கிய அறிவு அவரில் தொடங்கியது. அவரது TWELFTH NIGHT,AS YOU LIKE IT, MIDSUMMER NIGHT'S DREAM, ROMEO AND JULIET, MERCHANT OF VENICE ஆகிய நாடகங்களை (ஒரு ஆர்வக் கோளாறில்) வாங்கி வந்து படிக்க முயற்சி செய்து, என்னதான் படித்தாலும் ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனதுண்டு.
பெரும்பாலும் 2 பக்கம் படிப்பதற்குள் தூக்கம் வந்து விடும். எனவே என் வாழ் நாளில் அதிகம் தூங்கியது இலக்கியம் படிக்கத் தொடங்கிய போது தானிருக்கும். எப்போது பார்த்தாலும் பையன் கையில் புத்தகத்துடன் தூங்கறதை பார்த்த என் பாட்டிக்கு ஏகப்பட்ட சந்தோசம் வேறு. நாடகத்தில் வரும் டையலாக் மூலம் ஒன்றுமே புரியாததால், TWELFTH NIGHT-ன் விளக்கவுரை வாங்கி வந்து அதைப் படித்து தெரிந்துக் கொண்டோம். எப்படியும் பக்கத்திற்கு பத்து முறையாவது டிக்சனரியை பார்க்க வேண்டியிருந்ததால் புத்தகத்தின் முடிவில் அதிகம் படித்தது டிக்சனரியின் பக்கங்களாகத்தானிருக்கும். விளைவு இருந்த ஆங்கில-தமிழ் டிக்சனரி கிழிந்து போய்விட்டது, பக்கங்களை பறக்க விடாமல் படிக்க அதிக கவனம் தேவையாயிருந்ததால், புதிய ஆக்ஸ்போர்ட் டிக்சனரி வாங்கி வந்தாகிவிட்டது.
இவ்வாறு ஷெக்ஸ்பியரை புரிந்துக் கொள்வது கடினம் என தெரிந்தவுடன் நமக்கு கிட்டியது SIDNEY SHELDON, என்னமா எழுதறார் (எழுதினார்!) மனுசன். புத்தகத்தை கையில் எடுத்தால் அடுத்த 3-4 மணி நேரத்தில் முடிந்து போய்விடுகிறது. well laid plans, sky is falling, rage of angels, the stranger in the mirror என வரிசையாக நாலைந்து படித்தாகிவிட்டது. பின் அடடா! நாம ஆங்கில அறிவை வளர்த்துக்கறதுக்காக இதை தொடங்கினோம்னு நியாபகத்திற்கு வர SIDNEY -க்கு BYE BYE சொல்லியாகிவிட்டது. அப்போதான் Dr. நவனீத கிருஷ்னன் -னு ஒரு பேராசியர் அறிமுகமானார். 'இவன் என்னடா எப்போ பாத்தாலும் பெரிய மேதாவி மாதிரி ஒரு புத்தகத்தை கையில் வச்சிகிட்டு சுத்தறானேன்' -னு, நம்மல கூப்பிட்டு பேசினார். அப்போதான் ஆங்கில க்ளாசிக்ஸ் பத்தி தெரிய வந்தது. CHARLES DICKENS, THOMAS HARDY, D H LAWRENCE, KAMALA DAS, GANDHI, NEHRU பத்தியெல்லாம் சொன்னார். ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பில் DICKENS -வோட OLIVER TWIST 'நான் டீடைல்' படிச்சதுண்டு, ஆனா விளக்கமாக படிக்க மிக அருமையாக இருந்தது. ஒரு சின்ன பையன் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்ரான்னு சொன்ன கதை! 2வது புத்தகமும் டிக்கின்ஸோடது தான், DAVID COPPERFIELD இதுவும் சின்ன பையன் கதைதான் ஆன முதல்ல சொன்னதவிட சூப்பர். அப்பறம் GREAT EXPECTATIONS ஒருவிதத்துல டிக்கின்ஸோட பையோகிராபி. Joe (கதையின் நாயகன்) அவரப் போலவே அப்பாவின் இறப்புக்கு பின் பிறந்த குழந்தை (posthumous child) அவன் வளர்றதும், படிக்கறதும், படம் வரையரதுல அவன் எப்படி ஆர்வத்தை வளர்த்துக்கிட்டான்கிறதை பத்தியும் அவர் வாழ்க்கை கதையை அப்படியே சொல்லியிருப்பார். இதுக்கு அப்பறமாதான் 'சுயசரிதை'-கள் படிக்கறதில் ஆசை வந்தது. முதல்ல படிச்சது காந்தியோட சத்திய சோதனை. இப்பவும் இந்த புத்தகம் இருபது ரூபாய்க்கு இந்தியா முழுவதும் பதினெட்டு மொழிகள்-ல கிடைக்குது. இது வரைக்கும் தன்னுடைய வாழ்வை இவ்வளவு வெளிப்படையாக யாருமே எழுதத் துணியவில்லை. அடுத்து படிச்சது MY STORY, கமலா தாஸோடது. இது அவங்க தன்னோட சாவுப் படுக்கையில் இருக்கும் போது எழுதனது. ஆனா அவங்களும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி அவங்க சாவலை. மாறாக தன் புத்தகம் மூலம் பேரும் புகழும் வாங்கிட்டாங்க. ரொம்ப தேடி கிடைக்காத ஒரு புத்தகம் AN AUTOBIOGRAPHY, நேருவோடது. இப்போ கிடைச்சாலும் படிச்சுடுவேன். நரசிம்ம ராவின் THE INSIDER படிக்க ஆர்வமாயிருக்கும். அப்போ அருந்ததி ராயோட THE GOD OF SMALL THINGS-கு புக்கர் பரிசு கிடைச்சிருந்தது. அதுக்காக வாங்கி படிச்சு, இதுக்கெல்லாம் போய் ஏன் பரிசு கொடுத்தாங்கன்னு தோணுச்சு. MEIN CAMPH ஹிட்லரோட சுயசரிதை, கொஞ்ச காலம் இந்த புத்தகத்திற்கு தடை விதிச்சிருந்தாங்க, அதுக்காகவே தேடி புடிச்சு பழய புத்தகத்தை படிச்சது த்ரில்லா இருந்துச்சு. MY INDIA, சிஸ்டர் நிவேதிதாவோடதும் புடிச்சது, ஏன் -னா ரொம்ப சின்ன புக். அப்பறம் சமீபத்தில் படிச்சது A SIMPLE PATH, மதர் தெரேசா - வோடது, அவங்க சொல்லச் சொல்ல இன்னொருத்தர் கம்பைல் பண்ணியிருந்தாங்க, கண்டிப்பா எல்லோரும் வாழ்க்கையில் ஒருமுறை படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இதைப் படித்தால் வாழ்க்கை பற்றிய உங்கள் கண்ணோட்டம் வேறு விதமாக மாறிவிடும். oxford publication முதல் பதிப்பு 1997 விலை 295 ரூபாய்கள்.
கதைக்கு திரும்ப வருவோம்... கிரேட் எக்ஸ்பக்டேசன்சும், PICKWICK PAPERS-ம் படிச்சதில்ல டிக்கின்ஸோட தீவிர ரசிகனாயிருந்தேன். அப்போதான் நம்ம பேராசிரியர்
"டேய் தாமஸ் ஹார்டியோட க்ளாசிக்ஸும் படி, ரொம்ப நல்லாயிருக்கும்" ன்னு சொன்னார்.
சரின்னு ஹார்டியோட THE MAYOR OF CASTERBRIDGE -ஐ தொடங்கியாச்சு. சே! வாழ்க்கைனா இவ்வளவுதானான்னு யோசிக்க வச்ச புத்தகம். அந்த புத்தகத்தை படிச்சிட்டிருந்தப்ப வெல்லாம் எனக்கே தெரியாமல் ஒரு சோகம் மனசிலே இருந்துட்டே இருக்கும். நான் மாறி போயிட்டேன்னு எல்லாரும் சொன்னாங்க. அதுக்காகவே சீக்கிரம் சீக்கிரமா படிச்சு முடிச்சேன். ரொம்ப சோகமான முடிவு, ஆரம்பமும் சோகம் தான். அடுத்ததும் ஹார்டியோடதுதான், TESS of the d'Urbervilles என் ஃபேவரைட். ஒரு பொண்ணுக்கு எவ்வளவு துன்பம் வரக்கூடாதோ அவ்வளவும் TESS -க்கு வரும் ஆனாலும் தன்னுடைய குடும்பத்துக்காகவே தன்னை முழுமையாக, உயிர் உட்பட அர்பணிச்சிக்கற ஒரு பாத்திரம் அவளுடையது. அதைப் படிச்சதும் ஆங்கில பெண்கள் மேலேயே ஒரு தனி மரியாதை வந்துருச்சு. THE WOODLANDERS ஆரம்பிச்சு பாதியிலேயே நின்னுபோச்சு. அடுத்தது D H LAWRENCE -ன் SONS AND LOVERS, உண்மையிலேயே லாரன்ஸ் ஒரு 'லேடீஸ் மேன்' தான். ரொம்ப சர்ச்சைக்குள்ளான புத்தகம், ஆனாலும் ரொம்ப இன்ரஸ்டிங்கா எழுதியிருப்பார். புத்தகத் தலைப்புக்காக படித்தது பெர்னாட்ஷாவின் THE DOCTORS DILEMMA, எரிக் செகலின் DOCTORS. செகலின் LOVE STORY நல்லாயிருந்தது டிக்கின்ஸின் THE TALE OF TWO CITIES-ம் jane austin -ன் PRIDE AND PREJUDICE -ம் பாதியிலேயே விட்டாச்சு, வாய்ப்பு கிடைச்சா இதெல்லாத்தையும் முழுசா படிச்சிடனும்.நம்ம அப்துல் கலாம் எழுதியது, WINGS OF FIRE -ம், INDIA 2020-ம் ஈடு இணையே இல்லை.
அப்பறம் படிச்சது சல்மான் ருஸ்டியின் THE MIDNIGHT CHILDREN, ஆனால் முடிக்க முடியலை. நம்ம குஷ்வந்தின் THE COMPANY OF WOMEN நல்லாயிருந்தது. நடுநடுவே கொசுறு நாவல் படிச்சாலும் நினைவில் நின்னது டான் ப்ரவுனின் THE DAVINCI CODE - ம், DIGITAL FORTRESS - ம் முன்னதை ஒப்பிட்டு பார்க்கும் போது பின்னது ஒன்றுமேயில்லை.இப்போவெல்லாம் greece, Robin sharma ன்னு படிச்சாலும் க்ளாசிக்ஸ் படிச்சப்போ இருந்த பிடிப்பு மற்ற எதிலேயும் இல்லை.
அப்பறம் அசினுக்கும் நம்மைப் போலவே ஆங்கில இலக்கியம் பிடிக்குமாம், என்பது மட்டுமல்லாமல், இரண்டு பேருக்கும் பிறந்த தினம் ஒரே நாள் தான். இது குறித்து அசின் மிகவும் சந்தோசமும், பெருமையும் அடைந்ததாக ஒரு கேள்வி.