மிக்கி - மௌஸ் -online

Sunday, January 11, 2009

திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு - பாகம் I


இடம் - மௌ, இந்தூர், மத்திய பிரதேசம்.
காலம் - 2009-ன் முதல் மாலை நேரம்.
இப்போது தான் இருட்டியிருந்தது. மேற்கு வானத்தில் 'விடி'வெள்ளியும், நடுவானத்தில் பெயர் தெரியாத நட்சத்திரமும் பளபளப்பாக தெரிந்தன, மற்ற நட்சத்திரங்கள் தூங்கி எழுந்த குழந்தைபோல, கண்களை கசக்கிக் கொண்டு வர ஆரம்பித்திருந்தன. பச்சை நிற ஜிப்சி வண்டிகள் பறந்துக் கொண்டிருந்தன. இடையே சிகப்பு விளக்கை எரிய விட்டவண்ணம் சில கருப்பு நிற கார்கள் சத்தமில்லாமல் கடந்துச் சென்றன. அவற்றின் முன்புறம் எண்பலகை இருக்க வேண்டிய இடத்தில், சிகப்பு பின்னனியில் தங்கநிற நட்சத்திரங்கள் மின்னின. வெள்ளை உடையில், சிவப்பு தொப்பியணிந்த இராணுவ போலீஸ்காரர் பலமாக காலை அடித்து வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். போவது பிரிகேடியரகவோ, மேஜர் அல்லது லெப்டினட் ஜெனரலாகவோ இருக்கலாம். சில குண்டான பெண்கள் நடந்துக் கொண்டும், சிலர் மெல்லியதாக ஓடிக்கொண்டும் இருந்தனர். சிறுவர்கள் சைக்கிளை உருட்டிக் கொண்டு வேகமாகச் சென்றனர். முழுவதும் வெள்ளை உடையணிந்த ஒருவர் சுமார் இருபது இராணுவ வீரர்களை ஒத்திசைவாக ஓடவைத்துக் கூட்டிச் சென்றுக் கொண்டிருந்தார். வழியிலிருந்த கேட்டில் இராணுவ உடையணிந்த இருவர் கையில் INSAS 5.6 ரைபிலுடன் முறைத்து பார்த்தனர். சற்றே உற்று நோக்கினால் ரைபில்களில் குண்டுகள் லோடு செய்யப் பட்டவை எனத் தெரிந்தது. அலுவலக வேலையாக 'மௌ' வந்திருந்த போது 'பானி பூரி' சாப்பிட ஆசைவந்து ரோட்டில் இறங்கி அலைந்து திரிந்த போது தான், நான் சுற்றுவது ராணுவ கண்டோன்மன்ட் ஏரியா என்பதை அறிகுறிகள் சற்று பலமாகவே தெரிவித்தன.

வழக்கமாக தடுக்கி விழும் இடமெல்லாம் இருக்கும் பானி பூரி வண்டிகள் இன்று ஒன்று கூட தென்படவில்லை. அருகிலிருந்த மார்கெட் முழுவதும் தேடிக் கொண்டே சுற்றிய போது ஒரு வண்டியில் தோசைபோல எதையோ ஒருவர் செய்வதைப் பார்த்தேன். 'நான் காண்பது கனவா? என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லையே! ஆமாம், தோசையே தான்'. பல நாள் 'வறண்ட ரொட்டி'யும் 'வறுத்த உருளை'க் கிழங்கும், வெங்காயமும் தின்று நொந்த எனக்கு, 'தோசை' திருப்பார்க் கடலில் கடைந்தெடுத்த தேவாமிர்தம் போல இருந்தது. அதுவும் சாம்பார், தேங்காய் சட்னி மற்றும் தக்காளிச் சட்னி, தமிழ் நாட்டில் சாப்பிட்ட அதே காம்பினேசன். அடடா, வாயைத் திறந்தால் வழிந்தோடிவிடும், எனவே விழுங்கிவிட்டு சொன்னேன்...
"பாயி, தோ மசாலா தோசா தேனா, ஜல்தி"
"தோ மினிட் ரோக்னா, அபி தையார் ஹோ ஜாயேகா" என பதில் வந்தது.
நீல மற்றும் வெள்ளை நிற கோடுகள் போட்ட அரைக் கைச்சட்டை, கருத்த உடல், சராசரி உயரத்துடன் ஒருவர் தோசைமாவை வண்டியிலிருந்த சூடான தோசைக்கல்லின் மீது ஊற்றிக் கொண்டிருந்தார். இப்போது தான் சாப்பிட்டு எழுந்த ஒரு முஸ்லீம் பாய் ஒருத்தர், பைஜாமா பாக்கெட்டில் கைவிட்டவாறு,
"எவ்வளவு ஆச்சுப்பா " என்றார்.
"பதினஞ்சு ரூபாய் கொடுங்கண்ணே"
ஒரு கணம் என் தலை சுற்றியது. சத்தியமாக நான் கேட்பது 'தங்கத் தமிழே' தான். யாராவது என்னைப் பிடித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் போலிருந்தது. இன்று காலையில் யார் முகத்தில் முழித்தேன் என நினைத்துக் கொண்டும், ஒரு நிமிடம் அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவித்து விட்டு கேட்டேன்....
"தமிழா?"
"ஆமாம்"
"எந்த ஊர்?"
"மறந்துட்டன்"
அவர் 'மருத' என்றது எனக்கு, 'மறந்துட்டேன்'-ங்கற மாதிரி கேட்டது. ஒரு வேலை தோசை-மயக்கமாக இருக்கலாம்.
"நல்லது" சிறிது நேரம் கழித்து அவர் பேச விருப்பம் காட்டாவிட்டாலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
"வந்து எத்தனை வருசமாவுது?"
"ரெண்டு வருசம்"
"ரெண்டு வருசத்துக்குள்ளே ஊரை மறந்துட்டீங்களா என்ன?"
"என்ன மறந்துட்டீங்களா?"
"இல்லை, நான் முன்னே சொந்த ஊர் கேட்டப்போ மறந்துட்டேன்னு சொன்னீங்களே"
"நான் மருத-ன்னேன். உனக்கு மறந்துட்டேன்-ன்னு கேட்டுச்சா?" மெல்லிதாக சிரித்தார்.
"ஆமாம். தனியாவா இருக்கீங்க..?"
"இல்ல என் அண்ணன் கூட இருக்கார். இவர் தான் .." தன்னுடன் வேலை செய்துக் கொண்டிருந்தவரை கைகாட்டினார். உடன் என்னுடைய தோசையையும் கையில் திணித்தார்.
கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, "ம்..... நல்லாயிருக்கு, அப்படியே நம்ம ஊர் தோசை மாதிரியே"

"இல்லேன்னா இங்க வந்து பொழப்பு நடத்த முடியுமாண்ணே?"
"எப்படி இவ்ளோ தூரம் வந்தீங்க?"
"எங்க பெரியப்பா மகன் இந்தூரில கடைவச்சிருக்கார். அப்படியே நாங்களும் வந்துட்டோம்"
"அவர் தான் உங்களுக்கு கடை போட ஐடியா கொடுத்தாரா? வியாபாரம் எப்படி போகுது?"
"ஆமாம், பரவாயில்லை பக்கத்திலயே ஆர்மி ஏரியா இருக்கறதால நெறைய தமிழ் ஆளுங்க வருவாங்க. அவங்களால தான் இங்க கடை போட்டிருக்கோம்".
நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு வடக்கத்திய இளம் பெண் தன்னுடன் வந்திருந்தவனிடம், 'டோண்ட் டிரிங்க் த வாட்டர்" எனச் சொல்லிக் கொண்டிருந்தாள், அதற்குள் அவன் தண்ணீர் குடித்து விட்டிருந்தான்.

"ஓஹோ! எங்கே தங்கி இருக்கீங்க?"
"இங்க தான் ரூம் வாடகைக்கு எடுத்திருக்கோம். பின்ன சொந்த வீடா வாங்க முடியும்?"
"அதனாலென்ன, இன்னும் கொஞ்சநாள் போனா வாங்கிடலாம். கல்யாணம் ஆயிடுச்சா?"
"இன்னும் இல்லை"
"எப்போ ஊருக்கு போனீங்க?"
"நான் போய் ஒரு வருசமாகுது, தம்பி ஆறுமாசம் முன்னாலதான் போயிட்டு வந்தான்."
"வருசம் ஒரு முறைதான் போவீங்களா?"
"ஆமாம் ஊருக்கு போய் என்ன பண்றது?"
"அது சரி. எவ்ளோ ஆச்சு?"
"முப்பது ரூபாய்ங்கண்ணே"
"இந்தாங்க, உங்க பேரை சொல்லவேயில்லையே?"
"என் பேரு லட்சுமணன். அண்ணன் பேர் சிவராமன்"
பேருக்கு ஏத்தமாதிரியே இருக்கீங்க, அவங்க வனவாசம் 14 வருசம், உங்க வனவாசம் எத்தனை வருசம் கழிச்சு முடியப் போகுது? அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அப்பாவுக்கு கேன்சர், அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும்னு அவங்களுக்கும் ஒரு சோகப் பின்னனியிருக்கலாம். அதை தெரிந்துக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஏன் விருப்பம் இல்லை என பாகம் II ல் சொல்றேன்.
"அப்போ சரி, பார்க்கலாம்"
"சரிங்கண்ணே"

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home