பறவைகள் பலவிதம் பாகம் 3- மிஸ்டர் ஐயர்
ஒரு வெள்ளிக் கிழமை மாலை நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் போகும் ஒரு தனியார் பேருந்துள் ஏறியமர்ந்தேன். ஓட்டுநருக்கு பின் இருக்கை. எப்போதுமே பேருந்தின் முன்னிருக்கைகளில் அமர்ந்துச் செல்வது என்பது ஒரு சுகமான அனுபவம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை நான் தவறவிட்டதில்லை. பேருந்து புறப்பட தயாராக இருந்தது.சிறிது நேரத்தில் ஒரு ஆசாமி பேருந்தில் ஏறி பின்னால் ஒரு நோட்டம் விட்டு விட்டு, என்னறுகில் வந்து உட்கார்ந்தார். நடுவிலும், பின்னாலும் இருக்கை காலி இல்லாத காரணத்தால் இருக்கலாம். சுமார் நாற்பது வயதிருக்கும், பார்க்க சாமியார் போல இருந்தார். நன்கு வளர்ந்த தாடி, காவி நிற வேட்டி அணிந்திருந்தார். கையில் ஒரு ஜோல்னா பை இருந்தது. நான் சற்றே சன்னலோரம் தள்ளியமர்ந்தேன், ஒரு பாதுகாப்புக்காக தான். பேருந்து புறப்பட்டு பாதி தூரம் கடந்திருந்தது. எதிரே ஒரு லாரி கடந்துச் சென்றது. அதிலிருந்து வந்த வித்தியாசமான மணம் பேருந்தில் பலரின் முகத்தைச் சுழிக்க வைத்தது. சிலர் கைக்குட்டையினால் மூக்கை பொத்திக் கொண்டனர். வேறு சிலரோ கையை மூக்கின் முன்னும் பின்னும் ஆட்டி, "சே! என்ன ஒரு நாற்றம்" என்றனர்.
அருகிலிருந்த ஆசாமி இதில் மூன்றாம் ரகம். நான் சற்றே திரும்பி அவரிடம், "அது ஃபிஷ்மீல், அதாவது கருவாடு கொண்டு போகும் வண்டி" என்றேன்.
"ஐ அண்டர்ஸ்டாண்ட் ஃபிஷ்மீல், அதை என்ன செய்வாங்க" அவர் ஆங்கிலம் பேசியது எனக்கு வியப்பைத் தந்தது..
"நாமக்கல்லில் கோழிப் பண்ணைகள் அதிகம். தினம் ஒரு முட்டையிடும் கோழிக்கு, புரோட்டீன் அதிகம் தேவைப்படும், ஃபிஷ்மீலில் அதிகபட்ச புரோட்டின் உள்ளது"
"ஓஹோ"
"நாமக்கல்லில் கோழித்தீவனம் தயாரிக்கும் மில்கள் நிறைய உள்ளன, எனவே இங்கே கருவாடு ஏற்றிப் போகும் வண்டிகளும் அதிகம்."
அவர் தன்னை கணேஷ் என அறிமுகப் படுத்திக் கொண்டார், அவரின் முழு பெயர், கணேஷ் ஐயர் என்பது அவரிடம் பேசியதிலிருந்து தெரிந்தது. பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு இருவரும் சொந்த விசயங்களை பகிர ஆரம்பித்தோம். அவரிடம் பேசியதிலிருந்து, அவர் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கையியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் என்பது தெரியவந்தது. பெங்களூரிலிருந்து வெளிவரும் "டைம்ஸ் ஆப் இந்தியா'" பத்திரிக்கையின் சப்-எடிட்டரக பணிபுரிபவர் என்பது கொசுறுத் தகவல். அவர் தோற்றத்துக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை எனபது என்னை சற்றே நிலைகுலையச் செய்தது. அதுவரை என் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்ததை கேட்டே விட்டேன்.
"பின்பு ஏன் இந்த சாமியார் வேஷம்?"
இதைக் கேட்டு பெரிதாகச் சிரித்தவர்,
"நான் சாமியார் இல்லை, எனக்கு கல்யாணமாகி ஒரு பையன் இருக்கான்"
"எங்கே?"
"மனைவி, பையன் ரெண்டு பேரும் பெங்களூரில் இருக்கிறார்கள்"
"நீங்கள் மட்டும் ஏன் இப்படி....?"
" எனக்கு ட்ரவல் பண்றது பிடிக்கும், அதுவும் நெடுந்தூரப் பயணங்கள்."
"அப்படியா இப்போ எந்கேயிருந்து வர்றீங்க?"
" வீட்டை விட்டு கிளம்பி, 25 நாளாச்சு, மகாராஷ்ட்ரத்தைச் சுத்திட்டு இப்போ கேரளா வழியா பெங்களூர் போறேன்!."
" டோண்ட் மிஸ்டேக் மீ!, ஒரு ஃபாரின் ரிட்டார்ன் இப்படி பரதேசி மாதிரி காவி வேஷ்டியேல்லாம் கட்டிட்டு...."
"ஹலோ! வேஷ்டி நம்மோட ட்ரெடிஷ்னல் ட்ரெஸ்.எனக்கு இது பிடித்திருக்கிறது, அது மட்டுமில்ல நெடுந்தூர பயணங்களில் இதுதான் கம்ஃபார்டபில்". நமக்கு எங்கே அதெல்லாம் தெரியப் போகிறது. இதுவரை சேலத்திலிருந்து சென்னை போனது தான் நான் போன நெடுந்தூரப் பயணம்.
அதன்பின் பேச்சு தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியத்தின் மீது திரும்பியது, அப்போது மற்றுமோர் கருவாடு நிரம்பிய வண்டி கடந்துச் சென்றது. மற்றவர்கள் முகம் சுழிக்க, இம்முறை நண்பர் மூக்கை பொத்தவில்லை, மாறாக ஒரு புன்னகையை உதிர்த்தார். அந்த புன்னகையின் அர்த்தத்தை எங்கள் இருவரைத் தவிர மற்றவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் என்னை, நண்பனாக ஏற்றுக் கொண்டதற்கான அறிகுறி அதில் தெரிந்தது. நாங்கள் பயணம் செய்த பேருந்து சேலத்தை அடையும் முன் இருவரின் மின்னஞ்சல் முகவரிகள் கை மாறியிருந்தன. அதன்பின் இரு முறை தொலை பேசினோம். என்னிடம் கைப்பேசி இல்லை யாதலால் தொடர்பு வெகுநாள் நிலைக்கவில்லை. பின்னாளில் அவர் ஆனந்த விகடனில் தொடர் எழுத ஆரம்பித்த சமயம், அதன் ஒரு நகலை எனக்கு மின்னஞ்சல் செய்வார். சில மின்னஞ்சல்களுக்கு பின் அதுவும் நின்று போனது.
சமீபத்தில் ஹரித்துவார் போன போது சில் காவி வேட்டியணிந்த சாமியார்களை பார்க்க நேர்ந்தது.
"இவர்களில் சிலபலர் அமெரிக்கன் ரிட்டர்ன்களாக இருக்கக் கூடும், அவரவர் வாழ்க்கை, வாழ்வது அவரவர் இஷ்டம்"
உண்மையிலேயே பறவைகள் பலவிதம் தான்!!.
பி.கு: ராபின் சர்மா எழுதிய, "தி மாங்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரி" புத்தகத்தில் இது போன்ற ஒரு பாத்திரம் வரும்.
1 Comments:
//பி.கு: ராபின் சர்மா எழுதிய, "தி மாங்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரி" புத்தகத்தில் இது போன்ற ஒரு பாத்திரம் வரும்.//
அந்த கதாபாத்திரத்துக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம்
By கபீஷ், At 18/12/08 3:26 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home