மிக்கி - மௌஸ் -online

Saturday, May 03, 2008

பறவைகள் பலவிதம் - 1 நரைத்த தலை ஆயா!

முன்பு எனது பாட்டி இருந்த தெருவில் ஒரு பாட்டி (ஆயா) இருந்தார். அவர் பெயர் தெரியாது. முடியெல்லாம் நரைத்து போய் மருந்துக்கும் கூட கருத்த முடியில்லாமல் வெள்ளை வெளேர் என இருந்ததால் நரைத்த தலை ஆயா ஆகிவிட்டார். இப்படித்தான் எனது பாட்டி வீட்டுக்கும், பின்-வீட்டுக்கும் நடுவே உள்ள ஒற்றைச் சுவரின் ஒரு செங்கலை மட்டும் அகற்றி ஒரு சந்து உண்டு பண்ணியிருந்தார்கள். அந்த பின் வீட்டு ஆயாவுடனான உறவு எப்போதும் சந்து வழியே ஆனதால் அவை சந்து-ஆயா ஆகிவிட்டார். நான் சொல்ல வந்தது ந.த.ஆயா பற்றி. அவரது சொந்தகாரகள் யார், யார்? கணவர் யார்? என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. அவருக்கு இரு மகன்கள் இருப்பதாகவும், ஒருவன் பெங்களூரில் டிரைவராக இருப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. அவர்கள் இருவரும் வந்து ந.த.ஆயாவை பார்த்ததில்லையாதலால் அவர்களையும் யாரும் பார்த்ததில்லை.
ஆயா சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாள் செலவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்றால், அறுவடை காலத்தில் கூலி வேலைக்குச் செல்வாள். வயல் வேலை அல்லாத நாட்களில் மண்டியிலிருந்து புளி வாங்கி வந்து அதை உரித்து, கொட்டையிலிருந்து பிரித்தெடுத்து, நசுக்கித் தருவதன் மூலமும், சாக்லேட் மிட்டாய்க்கு கவர் சுத்துவதன் மூலமும் தனக்கு வேண்டிய பணம் ஈட்டி வந்தாள். அவளுக்கு தெரு முழுவதும் நிறைய நண்பர்கள் எனது பாட்டி உட்பட, உண்டு பெரும்பாலும் அவளின் வயதொத்த ஆயாக்களாக இருக்கும். அவளுக்கு ஒரு கணவன் இருந்ததாகவும், அவன் பெரிய குடிகாரனாக இருந்து இளம் வயதிலேயே இறந்துவிட்டான் என்றும் சிலர் கூறுவர். இது குறித்த பேச்சுக்களை அவர் தவிர்த்துவிடுவார் அல்லது பேசுபவர்களை தவித்து விடுவார். தனது இடுப்பிலேயே காது குடையும் கம்பி, முள் எடுக்கும் கம்பி, என ஏழு எட்டு விதமான ஆயுதங்கள் அவரின் ஒற்றைக் குடிசையின், உடைந்த பூட்டின், ஓட்டைச் சாவியின் உடன் கொத்தாக தொங்கும். அவருக்கு குழந்தை வளர்ப்பு குறித்த எல்லா விசயங்களும் அத்துபடி, நிறைய கதை சொல்லுவார். நானும் அவரிடம் காதை சுத்தம் செய்ய(வும்) கொடுத்து விட்டு, அவரிடன் கதையின் ஆர்வத்திலும், அவர் காது குடையும் சுகத்திலும்,அவரின் மடியிலேயே, அவரின் நைந்த புடவையின் ஒரு வித கந்தல் மணத்திலேயே உறங்கிப் போனதுண்டு. அவரிடம் எப்போதும் பத்து பதினைந்து கருப்பு வெத்தலை இருக்கும். ஒரு சின்ன பையில் கொட்டை பாக்கும், சுண்ணாம்பு டப்பியும் வைத்திருப்பார். யார் கேட்டாலும் 'இல்லை' என்று சொல்லாமல் கொடுப்பார். ஏனென்றால் பெரும்பாலான சமயம் அவரின் மதியம் மற்றும் இரவு உணவு அவ்வாறு கேட்பவர்களின் வீடுகளிலேயே இருக்கும் என்பதானால். இது ஒரு மலிவான முதலீடு அவருக்கு. சில காலம் அவரே ஆட்டுக்கல்லில் மாவாட்டி, தெரு மக்களுக்கு பனியாரம் சுட்டு இரண்டு, நாலணாவிற்க்கு வியபாரம் செய்தது என் நினைவில் உண்டு. ஆனால் ஏனோ அவரால் தன்னுடைய வியாபாரத்தை தொடர்ந்து செய்ய முடியவில்லை. பலர் அவரிடம் கடனுக்கு பனியாரம் வாங்கி சாப்பிட்டுவிட்டு பின் காசு கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்று யாரோ பின்னாளில் சொன்னார்கள். நல்ல மனிதர்களை கள்ள மனிதர்கள் வெகு சீக்கிரமாகவே ஏமாற்றி விடுகிறார்கள். ந.த.ஆயா அந்த தள்ளாத வயதிலும் தெருவில் குறைந்தது ஐம்பது முறையாவது இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு தினமும் நடப்பார்.
யார் வீட்டில் கடைக்குச் சென்று சாமான் வாங்க வேண்டுமென்றாலும் உடனே சென்று வாங்கி வருவார். எந்த விசேசமானாலும், நிச்சயதார்த்தம், கல்யாணம், குழந்தை பிறப்பு, புனித நீராட்டு விழா, இறப்பு மற்றும் கருமாதி என் எல்லா நிகழ்ச்சிக்கும் அழைப்பில்லாமல் ஆஜராவதோடு, அனைத்து வேலைகளையும் செய்வார். ஒரு விசேசத்தில் அவரை பார்க்காவிட்டாலும் ந.த.ஆயா எங்கே என கேட்காத எந்த ஒரு நிகழ்ச்சியும் ந.த.ஆயா இல்லாமல் முழுமையுறாது. இப்படிபட்டவர் தனது இறுதிப்படுக்கையில் இருந்த போதும் தெருவீட்டாரே அவருக்கு மருந்து, மாத்திரை எல்லம் வாங்கி வந்து கொடுத்தனர். அவரது இறுதி ஊர்வலத்திலும் அவரின் உறவினர் யாரும் வரவில்லை. அவரின் உற்றாரான தெருவீட்டினரே இறுதிச் சடங்குகளைச் செய்தனர். இப்போதும் அந்த தெரு வழியே செல்லும் போது மழைநீரில் கரைந்து, சிதிலமடைந்து நிற்கும் பக்கச் சுவர்களும், அருகே உடைந்த இருக்கும் ஆட்டுக்கல்லும், அவரின் கந்தல் புடவையின் மணத்தையும், காது குடையும் சுகத்தையும் எனக்கு நினைவு படுத்திச் செல்லும்.

6 Comments:

  • மனிதநேயம் மறைந்து வரும் காலத்தில் மனநிறைவு தரும் நெகிழ்ச்சியான பதிவு. வாழ்த்துக்கள்.

    By Blogger குறளோவியம், At 3/5/08 6:38 PM  

  • நன்றி! மனிதநேயம் என்பது அருகிவரும் இந்நேரத்தில், மனமெல்லாம் பணமாகி விட்டதால், சில நல்லவர்களை பதிவு செய்யும் என் முதல் முயற்சி இது. தங்களின் மறுமொழி எனக்கு ஊக்கமளிக்கிறது.

    By Blogger மிக்கி மௌஸ், At 3/5/08 8:11 PM  

  • நன்றி! மனிதநேயம் என்பது அருகிவரும் இந்நேரத்தில், மனமெல்லாம் பணமாகி விட்டதால், சில நல்லவர்களை பதிவு செய்யும் என் முதல் முயற்சி இது. தங்களின் மறுமொழி எனக்கு ஊக்கமளிக்கிறது.

    By Blogger மிக்கி மௌஸ், At 3/5/08 8:12 PM  

  • நல்ல பதிவு.

    By Anonymous Anonymous, At 3/5/08 9:03 PM  

  • நன்றி, தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    By Anonymous Anonymous, At 3/5/08 10:20 PM  

  • Good post

    By Blogger Amu, At 4/8/09 10:15 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home