மிக்கி - மௌஸ் -online

Saturday, June 10, 2006

படிக்கட்டு பயணங்கள்




வழக்கம் போல காலை எழுந்து வண்டியில் பறந்துக் கொண்டிருந்த போதுதான் அந்த பஸ்ஸை பார்த்தேன். முழுவதும் நிரம்பி வழிந்துக் கொண்டு ஒரு பக்கமாக சாய்ந்துக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. அன்று நாள் முழுவதும் நான் படிக்கும் போது அந்த பஸ்ஸில் பயணம் செய்து ஸ்கூலுக்கு போனது தான் மனதில் நிழலாடியது. 30 ம் நம்பர் பஸ் என்றால் மாணவர் மத்தியில் மிகவும் பிரபலம். எங்கள் ஊரிலிருந்து சுமார் 12 கி மீ தூரத்திலிருந்த ஸ்கூலுக்கு தினம், தினம் அந்த பஸ்ஸில் தான் போவோம். காலை 8:25 க்கு இங்கும் மாலை 4:30க்கு ஸ்கூலிலும் என்பதால் எப்போதும் பயணம் அந்த பஸ்ஸில் தான். சுமார் நான்கு வருடங்களுக்கு தினம் ஒரு மணி நேரம் இந்த பஸ்ஸில் தான் கழிந்தது. காலை ட்யூசன் (tuition) முடித்துவிட்டு அவசர அவசரமாக பஸ்ஸை பிடிக்க வேண்டும். பல சந்தர்பங்களில் பஸ் புறப்பட்டுவிடும், எனவே ஒரு திருப்பத்தில் திரும்பும் போது acrobat வேலை எல்லாம் செய்து ஏற வேண்டிருக்கும். அப்போதெல்லாம் 1 முதல் 68 வரை (எங்கள் ஊரில 68 வரை தான் பஸ்கள் இருந்தன)எந்த நம்பர் பஸ் எந்த ஊருக்குச் செல்லும் என்பது கண்டக்டர்களுக்கு பின் எங்களுக்குத் தான் தெரியும். இது பற்றிய நீண்ட விவாதங்களும் பஸ் பயணத்தின் போது நடக்கும், சில சமயங்களில் கண்டக்டரிடம் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்வோம்.


டவுன் பஸ்ஸில் பயணம் செய்வது என்பது எப்போதுமே சுவாரஸ்யமான அனுபவம்.அப்போது பல வகைப்பட்ட மனிதர்களை பார்க்கலாம்.25 பைசாவுக்கு சண்டை போடுவோர், டிக்கட் என்பதை ரிக்கட் எனச் சொல்லும் பல்லு போன கிழவிகள், டிக்கடே வாங்காத காலேஜ் அண்ணன்கள், தினம் தவறாமல் பெண்களுக்கு சீட் போட்டு கொடுக்கும் ரோமியோக்கள் என பல பேர், சிலர் டிக்கட் வாங்கி அதை மிக பத்திரமாக கைக்கடிகாரத்தில் சொருகி வைப்பர் (!). மாலை திரும்ப வரும் போது பெரும்பாலும் நிற்க மட்டுமே முடியும். பாதிக்கும் மேற்பட்டோர் படிகளில் தொங்கிக் கொண்டு தான் வரவேண்டி இருக்கும். அப்படி ஒரு நாள், ஒரு படிக்கட்டில் நின்ற மனிதர் ஒருவர், என் நண்பனை பார்த்து “ஏம்பா உள்ள தான் இடம் இருக்கு இல்ல~ கொஞ்சம் மேல போறது” என்றார். இவனோ கொஞ்சம் கோவப்பட்டு “அதெல்லாம் முடியாது. வேணும்னா, நீ மேல போ” ன்னு சொல்லிவிட்டான். பத்து பாஸ் பண்ணி +1 போன பிறகு தான் அவர் ஒரு தமிழ் வாத்தியார் (மேல் நிலை வகுப்பு)என்று தெரியவந்தது. அதன் பின் ஒவ்வொரு வகுப்பிலும் அவனை எழுப்பி “ பஸ் கண்டக்டர்” என அழைத்து கேள்விகள் கேட்காமல் விடமாட்டார்.

இப்போதும் அந்த வழி போகும் போதும் பழைய ஞயாபங்ங்கள் சிறகடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் முன் இருந்த குதூகலம் இல்லை. முடிந்த இளமைப் பருவம் மீண்டும் வருவதில்லை, அதனால் என்ன நினைவுகள் தானே சுகம். ஸ்கூலுக்கு பஸ் போகும் வழில் ஒரு ‘S’ வடிவ வளைவு இருக்கும், அந்த இடம் வரும் முன் அனைவரும் ஒன்றாக கண்களை மூடிக் கொண்டு வளைவில் பஸ் வளைவதை அனுபவித்து குதுகளிப்போம். சில பஸ் இல்லாத நேரங்களில் நடந்தும், வேறு பல வாகனங்களில் தொற்றிக் கொண்டும் வீடு வந்துள்ளோம். அப்படி நடந்து வரும் தருனங்களில் வழியில் உள்ள ஒற்றை மரங்களும், பாழடைந்த வீடும், பழைய மண்டபமும் எங்களின் இளைப்பாறும் இ டங்களானது. அந்த தருனங்கள் பருவ மீசை முளைக்கத்துவங்கிய வயது என்பதால் எங்களின் பேச்சுகள் பெரும்பாலும் உடன் படிக்கும் பெண்களைப் பற்றியதாகத் தான் இருக்கும். அப்படி ஒரு நாள் பேசியது இன்றளவும் பசுமரத்தாணி போல (எந்த பெண் என்பது உட்பட) நினைவில் உள்ளது. 30 ம் நம்பர் பஸ் எங்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது, நீண்ட நாள் விடுமுறையின் போதும், கடை அடைப்பின் போதும் அந்த பஸ்ஸில் பயணம் செய்யாத தருனங்களிலும், மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத வலி இருக்கும். சில விடுமுறை தினங்களிலும் பஸ் பயணம் செய்யாத தினங்களிலும் வழியில் பஸ்ஸை பார்க்கும் போதும் வரும் சந்தோசத்திற்கு இணையாக இப்போதெல்லாம் எந்த நிகழ்வையும் கூற முடியாது. “என்ன சார் வந்த உடனேவா?” என சக ஊழியர் பேசுவது எங்கோ தூரத்தில் கேட்கிறது. சற்றே சுதாரித்துக் கொண்டு “இல்ல சார், நைட் சரியா துக்கம் வரலை” என்று ஒரு பொய் கூறிவிட்டு அலுவலக மேலாளரை பார்க்க file-கட்டோடு ஓடினேன்.
விரைவில் சந்திப்போம்……………

1 Comments:

  • please have a contact cheran(autograph part1 ,part2,part3..........)

    By Anonymous Anonymous, At 16/9/09 7:34 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home