மிக்கி - மௌஸ் -online

Saturday, May 03, 2008

பின்னம்

இவ்வளவு அழகான வார்த்தை. வெகுநாட்களுக்கு பிறகு சரியாக சொல்லப் போனால் வெகு வருடங்களுக்கு பிறகு கண்ணில் பட்ட வார்த்தை. கணக்கில் ஒரு பகுதியை பின்னம் என்பார்கள். அது முழுமையாகாது. ஒரு பகுதி மட்டுமே. இது போலவே மனிதர்களும். நாம் அனைவருமே பின்னங்கள். பின்னமல்லாத மனிதனை பிண்டம் என அழைக்கலாம். ஒருவன் யாருக்கும் முழுமையான நம்பிக்கைக்கு உரியவனாக இருக்க முடியாது. முழுமை என்பது இலட்சிய இயந்திரம் போல கற்பனையில் மட்டுமே சாத்தியமான விசயம். உலகில் யாருமே முழுமையாக திருப்தி அடைந்திருக்க மாட்டார்கள். பல கோடி சம்பாதித்தவனும் அதே நிலையில் தான் உள்ளான். சில நூறு சம்பாதிப்பவனுக்கும் அதே நிலைதான்.
இது தான் இப்படி என்றால் இந்த உலகில் எந்த ஒரு பொருளைப் பற்றிய மனிதனின் அறிவும் முழுமையற்றதாகவே இருக்கிறது. அணு முதல் அண்டம் வரை நமது அறிவு பகுதி அதாவது பின்னம் மட்டுமே. நம் நாடு உலகின் ஒரு பின்னம். நம் குடும்பம் சமூகத்தின் ஒரு பின்னம். நாம் குடும்பத்தின் ஒரு பின்னம். நாமே பஞ்சபூதங்களின் பின்னம் தான். நான் காணும் கனவுகள் முழுமையா இல்லை. கன்வுகள் என்றுமே முடிவுறா, இன்று நான் காணும் கனவு பகுதி மட்டுமே. என்னவளை பற்றிய கனவுகள் கற்பனை முழுமை பெற்றதா? முடிவுற்றதா இல்லையே. இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. எனது மனைவியாக வந்தவள் எனது கனவு தேவதையை முழுமையாக ஒத்திருந்தாளா? இல்லை பின்னம் தான்?!. நான் எனது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்டேனா? இல்லை பின்னம் தான். இதுவரை வாழ்ந்த வாழ்வையாவது முழுமையாக வாழ்ந்தேனா? இல்லையே பின்னம் தான்.
எனது சந்தோசமான தருனத்திலும் நூறு சதவீதம் சந்தோசமாக இருந்தேனா? இல்லை ஒரு துக்கம் மனதில் இருந்தது. நான் மிகவும் துக்கப்பட்ட சமயத்திலாவது முழுமையும் துக்கத்துடன் இருந்தேனா? இல்லை கொஞ்சமேனும் ஆறுதல் இருந்தது. நான் ஆறுதல் அடைந்த சமயத்திலாவது முழுவதும் ஆறுதல் அடையவில்லையே! ஒரு பயம் இருந்துக் கொண்டுதான் இருந்தது. இனி என்ன ஆகுமோ என்ற பயம். ஆக பின்னமாக பிறந்து பின்னமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும். இதில் நான் முழுமையும் உண்மையுடையவன் என்றோ, நம்பிக்கைக்கு உரியவன் என்றோ, முழுவதும் நம்புகின்றேன் என்றோ, முழுவதும் சார்ந்திருக்கின்றேன் என்றோ யாரும், யாரையும் கூறிவிட முடியாது. இவ்வாறு பின்னங்காளுடன் பின்னமாக வாழும் ஒருவன் மரணத்தில் முழுமையடைகிறானா? மரணமடைந்தவனையே கேட்க வேண்டும் அவன் முழுமையடந்தானா என்று.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home