மிக்கி - மௌஸ் -online

Friday, December 26, 2008

பறவைகள் பலவிதம் 4 - அஸிஸ்டன்ட் 'ஐயா'


எட்டு முடிந்து ஒன்பதாம் வகுப்பு படிப்பதற்காக எங்கள் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியில் என்னைக் கொண்டு சேர்த்தார்கள். எமக்கென்னவோ வீட்டுக்கு அருகிலேயே இருந்த சுமாரான அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தான் லட்சியமாக இருந்தது.அரிசியில் புழு, குளிக்க தணுத்த தண்ணீர்ர் மற்றும் அறையில் மூட்டைப் பூச்சி என் பலப்பல நிஜ மற்றும் புனையப்பட்ட காரணங்களைச் சொல்லி விடுதியில் சேர்வதிலிருந்து தப்பித்தாகிவிட்டது. அரை வெற்றி.. வீட்டிலிருந்து தினமும் பேருந்தில் வந்து படித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு போவதென முடிவானது. ஹாஸ்டலிலிருந்து விலகும் முடிவை தெரிவிப்பதற்காக போன போதுதான் அவரைப் பார்த்தேன். தமிழ் கூறும் நல்லுலகில் 'ஆங்கிலம்' பற்றுவிக்கும் ஒரு ஆசிரியரை அன்புடன் "ஐயா" என அழைத்தது எங்கள் பள்ளியில் மட்டும் தான் இருக்கும். பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக 'அஸிஸ்டன்ட் ஐயா' இருந்தார்.
சற்றே கருத்த நிறம், நல்ல குண்டான உடல் (பெரிய தொப்பையுடன்), ஐந்தடிக்கும் குறைவான உயரம், அலுவலகத்தில் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். என்னையும் உடன் கூட்டிக் கொண்டு,அப்பா அவரிடம் போனார். அப்பா கண்டிப்பானவர் அதனால் தான் என்னையும் இழுத்துக் கொண்டு போயிருந்தார்.
"வணக்கம் சார்! இவன் என் பையன் ஒன்பதாமப்புல சேக்கனும்"
"நல்லது, அட்மிசன் எல்லாம் முடிஞ்சதா? "
"முடிஞ்சது, ஒரு சின்ன பிரச்சனை, முதல்ல ஹாஸ்டல்ல சேர்க்கறாதா சொல்லியிருந்தோம், ஆனா பையன் சேரமாட்டேங்கறான்"
அவர் என்னை கோபமாக பார்த்தார், நான் அப்பாவின் பின்னால் ஒளிந்தேன்.
"அப்படியா? என்னலே! ஹாஸ்டல்ல சேரமாட்டேனியாமே"
நான் ஒன்றும் பேசவில்லை. அப்பா அவரிடம்,
"பையன் கொஞ்சம் குறும்பு அதிகம்!. நீங்கதான் பாத்துக்கனும்".
இதை ரொம்ப அவசியம் சொல்லத்தான் வேண்டுமா.? என்னை உற்றுப் பார்த்த அவர்,
"அது பார்த்தாவே தெரியுது!!. பையன் பேர் என்ன? என் க்ளாஸ்லயே போட்டு தோலை உறிச்சுடறேன்"
ம்ஹும்! நான் பார்க்காத வத்தியாரா? ஆனால் பள்ளியை பற்றி நான் கேள்வி பட்டது எனக்கு பயத்தை கிளப்பியது. அது சரி... நம்ம மூஞ்சிய பாத்தா அப்படியா தெரியுது?.


பள்ளி தொடங்கும் நாளில் என்னை மட்டும் ஒன்பதாம் வகுப்பு 'சி' பிரிவிலும், என்னுடன் எட்டாவது படித்து அந்த பள்ளிக்கு வந்திருந்த நண்பர்களையெல்லாம் ஒன்பதாம் வகுப்பு "ஈ" பிரிவிலும் போட்டார்கள். எனக்கு மிகவும் கவலையாக போய்விட்டது. பின் அலுவலகத்தில் வேலை செய்யும் அப்பாவுக்கு தெரிந்த ஒருவர் வந்து "ஒன்பது 'சி' ரொம்ப நல்ல வகுப்பு, அஸிஸ்டன்ட் ஐயா தான் க்ளாஸ் டீச்சர், ரொம்ப நல்லவர் " என்றார். எங்கள் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தது பாவம் அவருக்கு தெரியாது. நான் வகுப்புக்கு போனேன், 'ஐயா' வகுப்புக்குள் வந்தவுடன் என்னைத் தனியாக கூப்பிட்டார்.
"வாலே!, வந்து முதல் பென்சிலே முதல் ஆளா உட்காரு".
நடு பென்சில் நண்பர்கள் புடை சூழ உட்காருவது தான் எனக்கு பழக்கம். ஆனால் என்னை தனியாக அதுவும் முதல் பென்சில் உட்கார வைத்திருந்தார்.
"உங்க அப்பா சொல்லியிருகார்ல!, உன்னை தனியாக கவனிக்கச் சொல்லி"
நான் எனது அப்பாவை நினைத்துக் கொண்டேன். அவரின் மதுரைத் தமிழ் எனக்கு புதுமையாகவும், வித்தியாசமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் அதே பள்ளியில் முதலிலிருந்து படித்து வந்த மாணவர்கள் அவரைப் பற்றிச் சொன்னது வேறு விதமாக இருந்தது."ஐயா ரொம்ப நல்லவர்" என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்தாக இருந்தது. எங்கள் அகராதியில் நல்லவர் என்றால், கம்பை கையில் எடுக்காதவர், எடுத்தாலும் சும்மா மிரட்டிவிட்டு அடிக்காமல் விட்டுவிடுபவர் என்று அர்த்தம். ஐயா எப்போதும் ஒரு கம்பை கையில் வைத்திருப்பார். எனவே அவர், பிந்தய ரகத்தினராக இருக்க வேண்டும்.
நான் முன்பு படித்த தமிழ் வழி பள்ளியில் சொல்லித் தந்த ஆங்கிலமெல்லாம் , 'கம்'க்கு எதிர் 'கோ', 'சிட்'க்கு எதிர் 'ஸ்டேண்ட்'. வாக்கியத்தில் எங்காவது yesterday, last week வந்தால் verb-கூட 'ed' சேர்த்து எழுத வேண்டும். tomorrow, next week வந்தால் will சேர்த்து எழுத வேண்டும் என்பது தான். இப்படிபட்ட பின்புலத்திலிருந்து வந்திருந்த எனக்கு ஆங்கிலத்தில் 'essay' என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. அதை நான் முத்ல முறை கேள்விப்பட்டேன். ஆங்கில நேட்டுப் புத்தகத்தின் முதல் பாடத்தில் essay- வை S.A என எழுதி வைத்தேன். அதற்கு ஏதோ விரிவாக்கம் இருக்கும் என்பது எனது எண்ணம். இந்த அளவில் ஆங்கிலம் படித்ததால் முதல் பருவத் தேர்வில் ஆங்கில பாடத்தில் 32 ம்திப்பெண்கள். தோல்வியடைந்துவிட்டேன். மற்ற எல்லா பாடங்களிலும் எப்படியோ பாஸ் ஆகி இருந்தேன். ஐயா, ஏற்கனவே என்மேல் அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்ததால்!! என்னை பென்சிலிருந்து இறக்கி அவர் மேசையின் அருகிலேயே கீழே உட்காரவைத்தார். இப்படித்தான் அவர் எனக்கு நெருக்கமானார். ஐயா எப்போதும் கையை இருமவது போல வைத்துக்கொண்டு வாயை பக்கவாட்டில் அசைத்துக் கொண்டே இருப்பார். பலர் அது அவருடைய இயல்பு என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஐயாவுக்கு கடலைமிட்டாய் என்றால் மிகவும் இஷ்டம்!, வகுப்பு இடைவேளைகளில் கடலை மிட்டாய் வாங்கிவந்து அதைத்தான் அப்படி சாப்பிடுகிறார் என்ற பிரம்ம இரகசியத்தை முதன்முதலில் கண்டு பிடித்துச் சொன்னவன் நான்தான்!!. ஐயா என்னை அவர் அருகே அமரவைத்ததன் விளைவு!.

அதன் பின் பரிட்சைத் தாள் கொடுக்கும் போதெல்லாம், அவரின் பிரம்பை எடுத்து ஒளிய வைப்பது அல்லது சன்னல் வழியாக வெளியே வீசியெறிவது போன்றவை எனது பணிகளாயின. அவர் என்னை அடிக்க வரும் போது, அவரின் பிரம்மை பிடித்துக் கொண்டு வகுப்பு முழுவதும் ஓடியதும் உண்டு. பின்னாளில் ஆங்கிலத்தில் புலமை பெற்று 'எண்பது' சதம் வாங்கும் அளவிற்கு வளர்ந்ததும், அவர் என்னை பென்சின் மேலே உட்காரச் சொல்லியும் மறுத்துவிட்டு அவர் அருகிலேயே ஒன்பதாம் வகுப்பு முழுதும் உட்கார்ந்திருந்தேன். ஐயாவுக்கும் எனக்குமான உறவு இவ்வாறாக இன்னும் நெருக்கமானது. ஓரிருமுறை என்னை அவர் வீட்டுக்கு கூட்டிப் போனார். நான் உணவு இடைவேளையின் போது ஐயாவுக்காக கடலை மிட்டாய் வாங்கி வந்து, பாதியை நான் வைத்துக் கொண்டு, அவருக்கு கொடுத்ததுண்டு. பத்தாம் வகுப்பிலும் எங்களின் வகுப்பு ஆசிரியராக அவரே வந்தது நான் செய்த பாக்கியம். பத்தாம் வகுப்பு முடிவுகள் வந்த போது, என்னை 'வெரி குட்' என பாராட்டினார். பிற்காலத்தில் பன்னிரண்டாவது வேறு பள்ளியில் படித்து முடித்து கல்லூரியில் சேர்ந்ததைச் சொல்ல அவரைத் தேடி போன போது, அவர் ரிட்டயர்டாகி சொந்த ஊருக்கே போய்விட்டிருந்தார். அவர் என்னை "எருமை மாடு" எனத் திட்டிக்கொண்டே பிரம்புடன் என்னைத் துரத்தியது என் நினைவில் வந்தது.
பறவைகள் பறந்து போனால் என்ன? அவற்றின் நினைவுகள் நெஞ்சோடு தங்கி விடுகின்றன என்றும், என்றென்றும்!!.

1 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home