மிக்கி - மௌஸ் -online

Thursday, January 08, 2009

ஒரு விளையாட்டு மைதானம்...

மெயின் ரோட்டிலிருந்து பக்கவாட்டில் உள்ளே செல்லும் ஐந்தடியில் ஒரு குறுக்குச் சந்து. ஒரு நேரத்தில் ஒரேயொரு பைக் மட்டுமே போக முடியும். இரண்டு வண்டிகள் வரநேர்ந்தால் ட்ராபிக் ஜாமாகிவிடும். யாராவது வீட்டின் வெளியே வண்டியை நிறுத்திவிட்டு போய்விட்டால் ஹார்ன் அடித்தோ அல்லது காலிங் பெல் அடித்தோ அவர்களை வெளியே கூப்பிட்டு வண்டியை நகர்த்திவிட்டு மட்டுமே போகமுடியும்.
அப்படி பட்ட தெருவில் இருந்துக் கொண்டு கபில்தேவ் கனவுடன் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் நாங்கள். 1983ல் இந்தியா வென்ற உலகக்கோப்பையின் மயக்கம் இன்னும் தெளிந்திருக்கவில்லையாதலால் எங்களின் கிரிக்கெட் விளையாடும் வேகம் குறையவில்லை. பெரும்பாலான் நேரங்களில் எங்களின் குறுகலான தெருவில் துடைப்பங் குச்சிகளை ஸ்டம்பாக வைத்துக் கொண்டுத் தான் எங்களின் கிரிக்கெட் விளையாட்டு இருக்கும். இதில் வழியில் போய்வரும் வாகனங்கள் மட்டுமல்லாது போவோரும் வருவோரும்கூட தொந்தரவாக இருப்பர். விடுமுறை நாட்களில் நாங்கள் பேட்-பாலுடன் வெளிப்பட்டால், அனைத்து வீட்டாரும் "வந்துட்டாங்கய்யா......வந்துட்டாங்க." ரேஞ்சில் உள்ளே ஓடிப்போய் கதவு சன்னல் எல்லாம் மூடிக்குவாங்க. அந்த ஐந்தடி சந்தில் கிரிக்கெட் விளையாடி சிக்சர், பவுன்சர் எல்லாம் அடிக்க முயற்சி செய்துக் கொண்டிருப்போம். மொத்த ப்ளேயர்களின் எண்ணிக்கை எப்போதும் ஐத்தைத் தாண்டியதில்லை. நாங்கள் அடிக்கும் பந்துகள் வாரத்திற்கு இரண்டு மூன்று சன்னல் கண்ணாடிகளையும் (சன்னல் மூடியிருந்தால்), சில பல பாத்திரங்களையும் (திறந்திருந்தால்) பதம் பார்க்கும். பெரும்பாலும்,
"இருடா, உங்க அம்மாகிட்ட சொல்றேன், போய் பாலை எடுத்துட்டு போ....ஆனா இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கனும்" என எச்சரித்துவிட்டு அனுப்பி விடுவார்கள் பெரும்பாலான தெரு ஆன்டிகள்.
நம்மளும், "சாரி ஆன்டி, இந்த ஒருமுறை விட்ருங்க, அடுத்த முறை 'பால்' வந்தால் நீங்களே வச்சிக்கங்க, அம்மாகிட்ட சொல்லாதீங்க ப்ளீஸ்" னு சொல்லிட்டு வந்துருவோம். சொல்லி வைத்தாற் போல் அடுத்த அரைமணி நேரத்தில் அவங்க வீட்டு பூஜை அறையிலோ, சமயலறையிலோ பந்து போயிருக்கும். இம்முறை மன்னிப்பு கிடைக்காது என தெரிந்தவுடன், பந்து விழுந்த அடுத்த நொடி அனைவரும் 'அப்பீட்டு' ஆயிருப்போம்.
"டேய்! அந்த ஆன்டி வந்து கேட்டால் யாரும் வாயை திறக்க கூடாது"
"டேய் நீதான 'பால்' அடிச்ச, நாளைக்கு வேற வாங்கிட்டு வந்திரு என்ன? இன்னைக்கு எல்லோரும் போயிருங்க, சீக்கிரம்" னு சொல்லிட்டு மாயமாயிருப்போம்.

அப்பறம் அந்த ஆன்டி வெளியே வந்து பாத்துட்டு, கன்னா பின்னான்னு அர்ச்சனை பண்ணிட்டு போயிருவாங்க. பின் எப்படியோ அம்மாவுக்கு விசயம் தெரியவர அன்னைக்கு சாயந்தரம் வீட்டில் 'பூஜை' நடக்கும். பிறகு ரெண்டு நாளுக்கு கிரிக்கெட்டை மறந்துட்டு கோலி, கில்லி என விளையாடுவோம். அடுத்த வாரம் விக்கிரமாதித்தன் வேதாளத்தின் கதைதான். மீண்டும் எங்கள் படை கிரிக்கெட் களத்தில் இருக்கும். இந்த முறை பந்து போய் விழுந்தது ஒரு ஸ்கூல் டீச்சர் வீட்டில். மிகவும் ஆபத்தான் இடம், அவர் வீட்டில் ஆளுயரத்துக்கு, எங்களைவிட உயரமாக ஒரு அல்ஷெசன் நாய் இருந்தது. அதனால் யாருக்கும் தெரியாமல் போய் பந்து எடுத்துவர முடியாது. அதன் பெயர் ரோசி, ரோசிக்கு எங்களிப் பார்த்தால் ரொம்ப இஷ்டம், வழக்கத்தைவிட உச்ச சுதியில் குலைத்து டீச்சரை கூப்பிட்டு விடும். இப்படியிருந்ததால் வீட்டுக்குள் போகாமல் வெளியே நின்றுக்கொண்டு "ஆன்டி ஆன்டி" என ஆண்டிக் கணக்காக கத்திக் கொண்டிருப்போம். இம்முறை பந்து விழுந்த இடம் அவர்கள் சமயலறை என்பதால் ஆன்டி தானாகவே பந்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.
" அடடா! என்னே ஓரு உயர்ந்த உள்ளம் , தானே எடுத்துட்டு வந்து தர்றாங்க" ன்னு நாங்க பேசிட்டு இருக்கும் போதே, அடுத்த கையில் அரிவாள்மனை இருந்ததை கவனிக்க தவறிவிட்டிருந்தோம். வெளியே வந்தவர், எங்களை நன்றாக அர்ச்சத்திததுடன், பந்தை இரு துண்டுகளாக்கி கண்முன்னே வீசிவிட்டு போய்விட்டார். எதிர்த்த வீடுதான் எங்களது, சத்தம் கேட்டு அம்மாவும் வெளியே வந்து பார்த்துவிட்டதால், வழக்கமாக மாலையில் நடக்கும் பூஜை அன்று காலையிலேயே நடந்தது. கண்கள், முகமெல்லாம் வீங்கியிருந்த அன்று மாலையே வேறு பந்து வாங்கி வந்தாகிவிட்டது. ஒரு ஏப்ரல் மாதத்தின் விடுமுறை நாளொன்றில் இப்படி அடிக்கடி பந்து வாங்கிவருவது பட்ஜட்டுக்கு கட்டுப்படியாகாது என்பதால் வேறு வழி செய்ய வேண்டும் என எங்கள் வீட்டு காம்பௌன்ட் சுவரின் மீது நடந்த கூட்டத்தில் ஏகமனதாக முடிவானது. வேறு என்ன செய்ய முடியும்?. எங்கள் வீட்டை ஒட்டினாற் போல் சுமார் இரண்டாயிரம் சதுர அடியில் ஒரு நிலம் இருந்தது. எப்போதோ பேஸ்மன்ட் போட்டுவிட்டு, வீடு கட்டாமல் விட்டிருந்தனர். அங்கே முட்செடிகள் மண்டிக் கிடந்தன. அங்கே பாம்புகள் கூட பார்த்திருந்தோம். சில வீடுகளின் சாக்கடை நீர் அங்கே பாய்ந்துக் கொண்டிருந்தது. அந்த நிலத்தை சரிசெய்து அங்கே கிரிக்கெட் விளையாடுவது என முடிவானது. இரண்டு அரிவாளையும், சில குச்சிகளையும் வைத்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்ய முற்பட்ட போது எங்களை ஊக்குவிப்போர் யாருமில்லை மாறாக,
" உனக்கு ஏன் இந்த வேலை? ஏதாவது பூச்சியிருந்து கடிச்சு வைக்கப் போகுது" போன்ற அறிவுரைகள் வந்து விழுந்தன. நல்ல வெயில் காலமாதலால் முட்செடிகள் காய்ந்து போய் கிடந்தன. எனவே ஒரு சுபயோக சுபதினத்தில் அதை கொளுத்தி விடுவதென காம்பௌன்ட் கான்பரன்ஸில் முடிவானது. மண்ணென்னையும் தீப்பெட்டியும் எனது உபயம். அம்மாவுக்கு தெரியாமல் கடத்திக் கொண்டு வந்தாகிவிட்டது.

ஒரு நண்பனின் உதவியுடன் பற்றவைத்தாகிவிட்டது. மள மளவென பரவிய தீ கொளுந்துவிட்டு எரிந்தது. தீயில் பக்கத்துவீட்டு தென்னை மர ஓலைகளும் தீப்பற்றிக் கொண்டன. எங்கள் வீட்டுச் சுவரில் கரி அப்பியது. அந்த பக்கமாக வந்த TV வயர் எரிந்து கம்பிகள் வெளியே தெரிந்தன. பின்வீட்டு ஓடுகள் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறின. அது ஒரு ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால் தெருவில் குடியிருந்த அனைத்து வீட்டாரும் மதிய தூக்கத்தை விட்டு விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுக்கும் மேலாக விட்டால் அப்பறம் ஒருவீடும் தேறாது என முடிவு செய்து நாங்கள் பற்றவைத்த தீயை எங்களை வைத்தே அணைத்தனர். அந்த காரியத்தைச் செய்தது நாங்களாகத் தான் இருக்கும் என்ற ஐயம் எல்லோருக்கும் மனதில் இருந்தபோதும், "வெயிலுக்கு தானாக தீப்பற்றியிருக்கும்" என அவிழ்த்து விட அனைவரும் அடிக்கும் வெயிலில் அந்த அனலின் பக்கம் நின்று விவாதிக்க விருப்பமில்லாமல் தத்தம் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். தீயின் விளைவாக எப்போதோ காணாமல் போயிருந்த ஐந்து பந்துகள் மீண்டும் காட்சித் தந்தன, அதில் மூன்று கருகிபோயிருந்தன, கொஞ்சம் மண்ணென்னை, நாலைந்து தீக்குச்சி முதலீட்டுக்கு நிகர லாபம் இரு பந்துகள். அன்று எப்படியோ ஆயுதபூஜையிலிருந்து தப்பித்தாகிவிட்டது.

தெளிவுரை : அர்ச்சனை - திட்டு, பூஜை - அடி உதை, ஆயுதபூஜை - தோசைக் கரண்டி, மத்து,குச்சி போன்ற ஆயுதங்களை பிரயோகித்து பூஜை செய்வது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home