மிக்கி - மௌஸ் -online

Wednesday, February 25, 2009

கேர்ள் ஃப்ரண்ட் - சிறு கதை


என் பெயர் ஹரி. பதினோரு வயசு, அரசு உயர்நிலை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு. வீட்டு பக்கத்திலேயே தான் ஸ்கூல். அப்பா கூட்டுறவு ஆபீஸ்ல கிளார்க் வேலை பார்க்கறார். அம்மா வீட்ல சமையல் செய்வாங்க, ஒரு தம்பி மூன்றாம் வகுப்பு 'இ' பிரிவு, எங்க ஸ்கூல்-ல தான் படிக்கறான். வீட்டு பக்கதிலேயே தான் ஸ்கூல் இருக்கு. காலையிலே மணி சத்தம் கேட்டவுடனேயே ஓட ஆரம்பித்தால் 'ப்ரேயர்'-க்கு போய் சேர்ந்துடுவேன். எனக்கு க்ளாஸ் ப்ரண்ட்ஸ் ரெண்டு பேர், சீனிவாசன், பிரகாஷ். எப்பவும் மூணு பேரும் ஒண்ணாதான் உட்காருவோம். இன்ட்ரவல் சமயத்தில குச்சி மிட்டாய் வாங்கி சாப்பிடுவோம். மதிய இடைவேளை-ல எட்டி-உதைக்கும் விளையாட்டு விளையாடுவோம். சாயந்தரம் ஐந்தரை மணிவரை ட்யூசன் இருக்கும். அதுக்கப்பறம் வீட்டுக்கு வந்தப்பறமும், லீவு நாள்-அப்பவும் வீட்ல ரொம்ப போரடிக்கும். எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு தான், மித்ரா வீடு. மித்ரா செயின்ட் ஜான்ஸ் ஸ்கூல்ல 4-ம் கிளாஸ் படிக்கறா. அவங்க அப்பா தெலுங்கு பேசுவார், காலேஜ்ல பெரிய வாத்தியாரா இருக்கறதால மித்ரா-வை இங்கிலீஸ் மீடியத்தல சேர்த்து படிக்க வைக்கறார்.

எங்க ரெண்டு பேர் வீடும் ஒரே காம்பௌன்ட்-ல தான் இருக்கு. வீட்டுக்கு பின்பக்கம் வராண்டா கூட ஒண்ணு தான் எங்க வீட்டு பின்னாடி நாலு ரோஜா பூச்செடி இருந்தது. மித்ரா வீட்டு முன்னாடி ஒரு மல்லிப்பூ செடியும் பக்கத்தலயே ஒரு எலுமிச்சை மரமும் இருந்தது. எங்க வீட்டு செடிக்கு அவளும் அவங்க வீட்டுசெடிக்கு நானும் தண்ணி ஊத்துவோம். மல்லிப்பூச் செடிக்கு கீழே தான் நாங்க விளையாடுவோம். தினமும் சாயந்தரம் காமபவுண்ட் மேல ஏறி மல்லிப்பூ பறிப்போம். அதை மித்ரா அம்மா கட்டி அவளுக்கு வச்சி விடுவாங்க. ரெண்டு பேரும் லீவு நாள்-ல மட்டும் தான் விளையாடுவோம். நான் மித்ரா வீட்டுக்கு போனா அம்மா திட்டுவாங்க, மித்ரா என் கூட விளையாடினா அவங்க அம்மா கூப்பிட்டு தெலுங்குல திட்டுவாங்க. எப்பவும் அவங்க வீட்டுக்கு போக மாட்டேன், ஆனா ஒளிஞ்சி விளையாடும் போது மட்டும் போக வேண்டி இருக்கும். நான் எப்போ கடைக்கு மளிகை சாமான் வாங்க போனாலும் மித்ராவையும் அவங்க அம்மாவுக்கு தெரியாமல் கூட்டி போவேன். மிச்சமான காசிலே 'கிஸ்மே எக்லேர்ஸ்' வாங்கி சாப்பிடுவோம், அது ரெண்டுபேருக்குமே ரொம்ப புடிச்ச சாக்லேட். பெரிசா இருக்கறதால ஒண்ணு வாங்கி ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கலாம். எப்போவாவது ஞாயிற்று கிழமைகள்ல ரெண்டு பேரோட அம்மாவும் கோவிலுக்கு ஒண்ணா போவாங்க, நாங்களும் கூட போவோம். அங்கே மித்ரா கூட இருக்கும் போது ரொம்ப ஜாலியா இருக்கும். கோயில்-ல கொடுக்கற பிரசாதத்தை ரெண்டு பேரும் பிரிச்சு சாப்பிடுவோம். ஒரு நாள் கோவில்- லருந்து திரும்ப வரும் போது, மித்ரா, "நாம ரெண்டு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருப்போம்" -னு சொன்னா. நானும் சரின்னு சொன்னேன்.அன்னைக்கு மதிய நேரத்தில அப்பா அம்மா எல்லாரும் தூங்கினதுக்கப்பறம், ஜன்னல்-ல ஏறி என்னை விளையாட கூப்பிட்டா, அன்னைக்கு சாயந்தரம் வரைக்கும் யாருக்கும் தெரியாமல் ரெண்டு பேரும் வெளையாடினோம்.அன்னைக்கு நிறைய கதை பேசினோம்.


அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு ஒருநாள் மதியான நேரம் சாப்பிட வீட்டுக்கு வந்தப்ப, மித்ரா ஸ்கூலுக்கு போகாம வீட்ல இருந்தா. அம்மா வந்து அவங்க வீடு காலி பண்ணிட்டு திருத்தணிக்கு போறதா சொன்னாங்க. ஸ்கூல் திரும்ப போகும் போது மித்ராவை எதிர்ல பார்த்தேன். அவங்க அப்பாவுக்கு திருத்தனிக்கு ட்ரன்ஸ்பர் ஆயிடுச்சுன்னு அழுதுட்டே சொன்னாள். அன்னைக்கு மதியம் ஸ்கூல்ல விளையாட்டு பீரியட் இருந்துச்சு, ஆனா எனக்கு விளையாட பிடிக்கலை, கிரிக்கெட்ல முதல் பால்-லயே அவுட் ஆகி வெளிய வந்துட்டேன். வயித்தில இறுக்கமா இருந்தது. நேரமாக நேரமாக அதிகமா வலிச்சது, அழுகை அழுகையா வந்தது. டீச்சர் ஒரு பையனை கூப்பிட்டு என் பையையும் கொடுத்து, என்னை வீட்ல விட்டுட்டு வரச் சொன்னாங்க. வீட்டுக்கு வந்தப்பறம் காலியாக இருந்த மித்ரா வீட்டையும், எலுமிச்சை மரத்தையும், மல்லிப்பூச்செடியையும் சுத்திச் சுத்தி வந்தேன். இப்போ வயித்துவலி இல்லை ஆனா கண்லேருந்து தண்ணி தண்ணியா வந்துட்டிருக்கு.

2 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home