மிக்கி - மௌஸ் -online

Sunday, January 11, 2009

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - பாகம் II


பஸ் ஸ்டாண்டில் சோடியம் ஆவி விளக்குகள் மஞ்சள் வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தன. ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கி டிரைவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தேன். ஒரு சாக்கடையை தாண்டி, ஒரு பேப்பர் கடையில் வெளியே தொங்கிக் கொண்டிருந்த விளம்பரத்தில் 'அமைச்சர் இன்று வருகை'-யை படித்தவாறு கடந்துச் சென்றேன். வழித்தடத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்களின் வாசனை இனிமையாக வந்துக் கொண்டிருந்தது. பலூனில் செய்யப்பட்ட குரங்கு, நாய் முதலியவை ஒரு குச்சியில் தொங்கிக் கொண்டிருந்தன. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தேன். பேருந்துக்கு இன்னும் சமயமிருந்தது. வழிக்கடையில் ஒரு ஆனந்த விகடன், ஒரு குமுதம் மற்றும் ஒரு குங்குமம் வாங்கிக் கொண்டேன். ஏனெனில் போகுமிடத்தில் இவை கிடைக்க வாய்ப்பில்லை.
இடம் - சேலம் பேருந்து நிலையம்.
காலம் - 2004ல் ஒரு அக்டோபர் மாதம் இரவு 0830 மணி.
குருவாயூர் போகும் விரைவுப் பேருந்து புறப்பட தயாராக இருப்பதாக ஒலிப் பெருக்கியில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். சரியான நேரத்திற்கு வந்து விட்டேன். பஸ்ஸில் ஏறி மத்திய பின் சீட்டில் சன்னலோரமாக உட்கார்ந்துக் கொண்டேன். பேருந்து காலியாக இருந்தது. நாலைந்து பேர் உட்கார்ந்துக் கொண்டிருந்தனர் அவ்வளவு தான்!. உள்ளே ஏறி வந்த கண்டக்டர் வெறுப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு, டிரைவரிடம்,
"நீ பஸ்ஸை எடுப்பா, வழியிலே வந்தா ஏத்திக்கலாம்"
டிரைவர் வந்து பஸ்ஸை ஸ்டார்ட் செய்தார். அப்போது தான் கவனித்தேன் என் சீட்டுக்கு எதிர்புறம் இருந்த சீட்டில் ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் உட்கார்ந்திருந்தார். வாரக் கணக்கில் ஷேவ் செய்யாத தாடி, கருத்து தாடை எலும்புடன் ஒட்டிப் போயிருந்த தாடைகள், சுருங்கிய தோல், பாதி நரைத்த முடி, வெள்ளை நிற சட்டை, கந்தலான வெள்ளை 4 முழ வேட்டியணிந்திருந்தார். உரப்பையினாலான கைப்பை வைத்திருந்தார். கண்களில் வெறுமையும் ஒருவித அச்சமும் தெரிந்தது. பேருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் கண்டக்டர் என்னிடம் வந்தார்.
"எங்கே போகணும்?"
"திருச்சூர்"
"135 ரூபாய்"
கொடுத்தேன். பின் அந்த பெரியவரிடம் திரும்பினார். அவர் குரல் தோனி வேறுவிதமாக மாறியிருந்தது.
"எங்க போற?"
"அங்கமாலி"
"150 ரூபாய்"
"அது வந்து........ 130 ரூபா தான் இருக்குதுங்க"
"அப்போ பாலக்காடு வாங்கிக்க"
"இல்லை, அவ்ளோதான் குடுத்தாங்க"
"சீக்கிரம் சொல்லு, பாலக்காடு வாங்கிக்கறயா? இல்ல இறங்கிக்கறயா?" கண்டக்டர் பெரியவரை மிரட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் பணம் இல்லையென்பது அவர் கண்ணிலேயே தெரிந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நான் கண்டக்டரிடம்,
"எவ்ளோ கம்மியா இருக்குங்க?"
"இருபது ரூபாய். ஏன் கொடுக்க போறீங்களா?"
"சரி. நான் கொடுக்கறேன், இந்தாங்க"
என்னை பார்த்த பெரியவரின் பார்வையில் ஒரு வாஞ்சையிருந்தது, "ரொம்ப நன்றி தம்பி"
"பரவாயில்ல, ஐயா எங்க போறீங்க?"
"அங்கமாலி"
கேரளாவிற்கு, முதுநிலை படிப்புக்காக போயிருந்த எனது இந்த இரண்டு வருட அனுபவத்தில் அங்கே நிறைய தமிழர்களை பார்த்திருந்தேன். அவர்கள் பெரும்பாலும் பழைய பேப்பர்களை சேகரித்துக் கொண்டும், ரோடு போட்டுக் கொண்டும் இருந்தனர். இரவுப் பொழுதுகளிலும், மழைக்காலங்களிலும் அவர்களை, பெரும்பாலும் இளைஞர்களை, கடைகளின் முன்புறம் பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்களிடம் பேசத் துணிந்ததில்லை. இப்போதுதான் இவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
"அங்கமாலியில என்ன பண்றீங்க, யார் இருக்கா?"
"யாருமில்ல, இப்போதான் கூலி வேலைக்கு போறேன்"
"பின்ன எப்படி போய் வேலை செய்வீங்க?"
"ஒருத்தர் போன் நம்பர் இருக்கு. அங்க போய் போன் பண்ணா அவர் வந்து கூட்டிப் போவார்"
"போன் பண்ண பணம் வச்சிருக்கீங்களா?"
"ம்........"
"இந்தாங்க வச்சிக்கங்க"
"இல்லை வேணாம்"
"பரவாயில்லை வச்சிக்கங்க, சொந்த ஊர் எது?" கொஞ்சம் பணத்தை அவர் கையில் திணித்து விட்டு கேட்டேன்.
"சங்ககிரி"
"பின்ன ஏன் அங்க போறீங்க?"
"விவசாயம் நொடிஞ்சு போச்சு. தரியும் சரியா ஓடறதில்லை. வாங்கன கடனுக்காக நிலத்தையும் கொடுத்துட்டேன். என்ன பண்றது குடும்பத்த காப்பாத்தனுமில்ல"
"சரி கூலிவேலை செய்யனும்னு முடிவு செஞ்சுட்டா... இங்கயே செய்யலாமில்ல?"
"இங்க ஒரு நாளுக்கு 60 - 70 ரூபா தான் தர்றாங்க. அங்க நாளைக்கு 150 தர்றாங்க"
"ஓஹோ, எங்கே தங்குவீங்க?"
"பகல்ல கூலி வேலை பார்ப்போம். ராத்திரியில் ஏதாவது கடையில நைட் வாட்ச்மேன் வேலை"
"தூங்கறது?"
"நேரம் கெடைக்கும் போது கடையிலேயே வெளிய படுத்துக்க வேண்டியது தான்"
"அதுக்கு எவ்ளோ தருவாங்க?"
"மாசம் 1500 ரூபாய்"
"எப்போ ஊருக்கு போவீங்க?"
"வருசம் ஒருமுறை, இல்லைன்னா ஆறு மாசத்துக்கு ஒருமுறை. பெரும்பாலும் பணத்தை மணியாடர் பண்ணிருவோம்"
"சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க"
"ம்........" அவர் கண்களில் ஒரு ஆறுதலும், கொஞ்சம் மிரட்சியும் மிச்சமிருந்தன. பேசிக் கொண்டிருந்த சற்று நேரத்திற்கெல்லாம் அவர் தூங்கிவிட்டார். நான் உறக்கம் வராமல் சன்னல் வழியே வெளியே வெறித்துக் கொண்டிருந்தேன்.........................................................நெடு நேரத்திற்கு.

பி.கு - எனது நோக்கம் இவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்?, முல்லைப் பெரியார் அணையிலும், காவிரியிலும் தண்ணீர் வராததுதான் காரணமா? என அலசுவது அல்ல. இவர்களை பதிவு செய்ய வேண்டும் அவ்வளவே!. காரண காரியங்களும், அவற்றுக்கான தீர்வுகளும் ஆளும் மற்றும் ஆளப்போகும் அரசியல்வாதிகளுக்கும், உண்மையிலேயே ஆளும் அதிகாரிகளுக்கும் (bureaucrats) தெரிந்திருக்க கூடும்.

6 Comments:

  • எத்தனையோ குப்பை பதிவுகளை படித்து கொண்டிருக்கையில் எப்படியோ உங்களின் அற்புதமான பதிவை கண்டேன்.

    மிக அருமை.

    உங்களின் உதவிய மனதிற்கு நன்றிகள்.

    குப்பன்_யாஹூ

    By Blogger குப்பன்.யாஹூ, At 12/1/09 10:34 PM  

  • நன்றி குப்பன்.

    By Blogger மிக்கி மௌஸ், At 13/1/09 11:03 PM  

  • நண்பருக்கு , கண்களில் கண்ணீர் வருகிறது , வயதான காலத்திலும் கஷ்டப்படும் அந்த பெரியவருக்காக . நன்றிகள் உங்களுக்கு .

    By Blogger ஜீவா, At 15/1/09 12:26 AM  

  • வருகைக்கு நன்றி Gg, நம்மைச் சுற்றி நிறையபேர் கஷ்டப்படறாங்க... ஆனால் நாமதான் கண்ணைமூடிட்டு போயிட்டு இருக்கோம்ங்கறது என் தனிப்பட்ட கருத்து.

    By Blogger மிக்கி மௌஸ், At 16/1/09 10:40 PM  

  • intha manadhu padaithu manidharkal ulakil silaper .... atil neenkalum oruvaur ..... unkal vallalai paaarattukiren atilum melaka oru siriya perunthu payanathin moolam ulakirku vizipunarvu erpaduthiya unkalaukku perithum nantri..... vijilesh Uganda, East africa.

    By Anonymous Anonymous, At 20/10/11 2:31 PM  

  • Uthaviya karangalukku paaratugal..

    By Anonymous Anonymous, At 22/2/13 12:43 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home