மிக்கி - மௌஸ் -online

Sunday, January 18, 2009

ஒரு சர்தார்ஜி பாடம் சொல்லிக் கொடுக்கிறார்..


சர்தார்ஜி, சிங் என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தாடியும், பெரிய தலைப்பாகையும் அடுத்து அவர்களின் கோமாளித்தனங்களும் தான். சர்தார்ஜி ஜோக்குகள் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலம். மிகப்பல ஜோக்குகள் படித்திருந்தாலும் நினைவில் நின்ற ஒன்று. ஒரு அறையின் மத்தியில் ஒரு கேக் வைக்கப் பட்டுள்ளது. அறையின் நான்கு மூலைகளில் முறையே ஹீமேன், ஸ்பைடர்மேன், ஒரு புத்திசாலி சர்தார் மற்றும் ஒரு முட்டாள் சர்தார் நிற்கின்றனர். ஒரு கணம் அறைவிளக்கு அணைக்கப் படுகிறது. நால்வரில் யார் போய் கேக்-ஐ எடுத்திருப்பார்கள்? என்ற கேள்விக்கு பதில், முட்டாள் சர்தார் என்பதாம். ஏனெனில் மற்ற மூன்றும் கற்பனை கதாபாத்திரங்களாம், 'புத்திசாலி சர்தார்' உட்பட. உங்களுக்கு தெரியுமா இது போன்ற பல ஜோக்குகளை உருவாக்கி உலவ விடுபவர்களே சர்தார்கள் தானென்று!.
மற்றவர்கள் நினைப்பது போலல்லாமல் அவர்கள் புத்திசாலிகள். இன்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பல சரக்கு கடைகளையும், பல்வேறு முன்னனி நிறுவனங்களையும் நிறுவி நடத்தி வருபவர்கள். இந்தியாவின் அன்னியச் செலவாணியில் கணிசமான ப்ங்குக்குச் சொந்தக்காரர்கள். சர்தார்களின் குடும்ப அமைப்பு மிகவும் வலுவானது. எப்போதும் பெரிய வீடுகளில் கூட்டுக் குடும்பமாக வாழ்பதையே விரும்புபவர்கள். பெரிய பெரிய பண்ணைகள் அமைத்து விவசாயம் செய்து வரும், வந்த பஞ்சாப் மாகானத்தைச் சேர்ந்த, இவர்கள் தான் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அதை குஷ்வந்த் சிங் (ஒரு சர்தார்) எழுதிய 'தி ட்ரென் டு பாக்கிஸ்தானி'-ல் படிக்க காணலாம். இவரின் 'ஜோக் புக்' -ம் மிக பிரபலம்!.
சர்தார்கள் தைரியசாலிகள். இமயமலையின் இடுக்குகளில் பத்ரிநாத்துக்கு அருகில் இருக்கும் 'ஹேம்-குன்ட்' சர்தார்களின் புனிதத் தலம், நமக்கு திருப்பதி போன்று. அதன் தரிசனக் காலங்களில் பஞ்சாப், சண்டிகர் மாநிலத்தில் பதிந்த வாகனங்களை உத்ரான்சலில் உள்ள இந்த தலத்துக்கு போகும் வழியெங்கும் வெகுவாக காணலாம். சுமார் 3 நாள் பிடிக்கும் இந்த பயணத்திற்கு பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகனங்களில் இரண்டிரண்டு பேராக போவதையே விரும்புகிறார்கள். இந்த பயணத்தின் போது வழியில் உணவருந்த உணவகங்களை (லங்கர்) சர்தார்களே உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அசோகர் செய்தது போல. அங்கு சென்று உணவருந்திவிட்டு பணம் கொடுக்க வேண்டியதில்லை. அங்கே ஒருசாமி படத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் தட்டில் காணிக்கையை போட்டுவிட்டு வந்தால் போதும். வழியெங்கும் உணவகம் அமைத்திருப்போர் மிகவும் அன்புடன் உணவருந்த அழைக்கின்றனர். யாரும் சாப்பிட்டுவிட்டு பணம் போடாமல் போவதில்லை என்பது குறிப்பிட வேண்டிய விசயம். நம்ம ஊராக இருந்திருந்தால் ஒரு கடை போட்டு, இரண்டு இட்லி ஒரு வடை, இருபத்தைந்து ரூபாய்க்கு விற்றிருப்போம்.
இமயமலைப் பயணத்தில் நிலச்சரிவு என்பது மிகவும் சகஜம் அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம். மலையிருந்து கல்லும், மண்ணும் ரோட்டில் சரிந்து பாதையை மூடிக்கொள்ளும். அப்படிபட்ட தருனங்களில் பயண போக்குவரத்து நாட்கணக்கில் கூட தடைபட்டுவிடும். அப்படிபட்ட ஒரு தருனத்தில் மாட்டிக் கொண்ட போது தான் அதை பார்க்க நேர்ந்தது. சுமார் நூற்றைம்பது வண்டிகள் தடையின் இருபுறமும் நின்றிருக்க இருசக்கர வாகனங்களில் வந்த சர்தார்கள் இருபது பேர் கலத்தில் இரங்கி வேலை செய்ய ஆரம்பித்தார்கள். வழியில் ரோட்டின் குறுக்கே ஓடிய ஒரு ஓடையில் நிலச்சரிவு நிகழ்ந்திருந்தது. பெரும்பாலும் இந்தொ-திபெத்திய எல்லை படை (ITBP) அல்லது GREF-லிருந்து ஆட்கள் வந்து புல்டோசர்களின் உதவியுடன் தடையை அப்புறப்படுத்தினால் மட்டுமே பயணத்தை தொடரமுடியும்.
ஆனால் இவர்கள் மூன்று மணிநேரத்தில் ஒருவாறு சரிசெய்து இரு சக்கர வாகனங்கள் போகுமாறு வழி செய்திருந்தார்கள். அதை மேலும் சரிசெய்து சிறிய கார்கள் போகும் வண்ணம் செய்துவிட்டு பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டு, அவர்களுக்காக மற்றவர்கள் கைதட்டியதையும் கண்டுக் கொள்ளாமல் போய்க் கொண்டிருந்தார்கள்.
எப்போதோ படித்த ஒரு கதை நியாபகம் வருகிறது. தென்னிந்தியாவிலிருந்து, வடக்கே சுற்றுலா போன மூன்று நண்பர்கள், டில்லியை சுற்றிப் பார்க்க ஒரு காரை வாடகைக்கு எடுத்தனர். காரின் ஓட்டுனராக வந்தவர் ஒரு சர்தார். வழிமுழுவதும் அவரை வெறுப்பேத்தும் வண்ணம் சர்தார் ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தனர் நண்பர்கள். பயண முடிவில் அவருக்கு வாடகை கொடுக்கும் போது, டிரைவர் ஒரு ரூபாயை நண்பர் கையில் கொடுத்து விட்டு சொன்னாராம், "நீங்கள் பார்க்கும் முதல் சர்தார் பிச்சைக்காரனுக்கு இதை கொடுத்து விடுங்கள்" என்று. அப்போது "சரி" என்று சொல்லி நண்பரும் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் வாங்கிக் கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அவரால் ஒரு சார்தார் பிச்சையெடுப்பதையும் பார்க்க இயலவில்லை. சர்தார்கள் கடும் உழைப்பாளிகள். இந்தியாவில் அதிகபட்ச ட்ரக்குகளை ஓட்டுபவர்கள் அவர்கள் தான். அதன் விளைவுதான் நம்மூர் சாலையோர 'பஞ்சாபி டாபா'க்கள். இன்றைக்கும் சீக்கிய கோவில்களில் உணவு இலவசம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்களாகவே சென்று உணவு தயாரித்து கொடுப்பார்கள். இதை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இன்றும் இராணுவத்தில் மிக மிக அதிக அளவில் சீக்கியர்களை காணலாம் (தற்போது பணிமூப்பு பெற்ற இராணுவ தளபதி JJ சிங் ஒரு உதாரணம்). மேலும் இராணுவ வீரர்களுக்கு தங்கள் பெண்னைக் கட்டிக் கொடுப்பதை ஒரு பெரிய கௌரவமாக கருதுகின்றனர். (நம்மூரில் மிலிட்டரில இருக்கற ஒருத்தருக்கு பொண்ணு கிடைக்கறதுக்குள்ள 'தாவு' தீந்துறுது). இவ்வளவு ஏன் நம்மை ஆள்பவரே ஒரு சர்தார் தானே!. அவரின் பெருமை எழுத ஒரு பதிவு போதாது. அடுத்த முறை சர்தார்ஜி ஜோக்கை படிக்கும் போது, சொல்லும் போதும் நினைவில் கொள்க சர்தார்கள் புத்திசாலிகள் நம்மைவிட.

8 Comments:

  • நல்ல பதிவுங்க.
    அவர்களிடம் இருக்கும் உழைப்பின் மீதான தீவிரக் காதல் வேறெவரிடமும் பார்க்க முடியாதவொன்று.

    By Anonymous Anonymous, At 18/1/09 10:47 PM  

  • நல்லாருக்கு பதிவு!!

    நல்ல உழைப்பாளிகள்!!

    By Blogger கபீஷ், At 18/1/09 11:02 PM  

  • நல்ல பதிவு. சுனாமி மாதிரியான இயற்கை சீற்றத்துக்கு நடுவில கூட சில சர்தார்கள் தங்களோட லாரிகளை நிறுத்தி ரொட்டி சுட்டு குடுத்திட்டு இருக்கறதை பாத்திருக்கேன்.

    By Blogger Sankar, At 19/1/09 6:39 AM  

  • சர்தார் ஒருவருக்கு PASSWORD சொன்னேன்:
    'பெரிய T'
    'சரி' - இது சர்தார்
    'மீண்டும் பெரிய T'
    'சரி'
    'சிறிய s'
    'y e s? or simply s?' - இது சர்தார்.

    By Blogger Nagaraj, At 19/1/09 8:57 AM  

  • unmai than nanum ithu varai sartharji pichaikarana pathathe ila. thamilargal yosika vendiya sathiyamana visayam.

    By Anonymous Anonymous, At 19/1/09 8:45 PM  

  • வருகைக்கு நன்றி, வேலன், கபீஷ், சங்கர் பாலசுப்ரமணியம், வீரா மற்றும் அனானி.
    1. நூற்றுக்கு நூறு உண்மை வேலன். எப்போதும் உழைக்கத் தயங்காதவர்கள் அவர்கள்.

    2. நான் ஆமோதிக்கிறேன் கபீஷ்

    3.இந்த நிகழ்வுல இருந்து, சர்தார்களின் நல்ல மனதும் தெரிய வருகிறது.

    4.ஜோக் நல்லாயிருக்கு வீரா.

    5. நானும் பார்த்ததில்லை அனானி-சார்.

    By Blogger மிக்கி மௌஸ், At 19/1/09 10:30 PM  

  • கற்றுக்கொள்ள வேண்டியதில் இருந்து காமெடி பண்ணுவதே நமக்கு பழக்கமாகி விட்டது...எல்லை காத்து நிற்கும் அந்த இமயமலை பற்றி எழுத்தில் கொண்டுவந்த உங்கள் முயற்சிக்கு ஒர் சல்யூட்...

    By Blogger கீழை ராஸா, At 19/1/09 10:43 PM  

  • //சர்தார்கள் புத்திசாலிகள் நம்மைவிட//
    100% unmai...

    //நம்மூரில் மிலிட்டரில இருக்கற ஒருத்தருக்கு பொண்ணு கிடைக்கறதுக்குள்ள 'தாவு' தீந்துறுது//
    apadiya???

    By Blogger Amu, At 2/8/09 11:45 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home