அவனும் 27 ரூபாய்களும்

லக்னோவின் 'சடார்' தெருக்களில் சுற்றித் திரிந்த போது தான் அவனுக்கு ஒன்று மிகச் சரியாக புலப்பட்டது. இது ஒரு நவீன முலாம் பூசப்பட்ட ஒரு நகரம் என்று.பளபள கடைகளுக்கும், மளமள ஓட்டல்களுக்கும் பின்னால் மூக்கை பொத்திக் கொண்டு மட்டுமே போகக் கூடிய இடத்தில், மக்கள் கூட்டம் கூட்டமாக குடியிருந்தனர், பெரும்பாலான வடக்கத்திய நகரங்களைப் போலவே!. மிகப் பெரிய கோழிக்கறி கடையின் முன் அவர்கள் வீசியெறியும் வீணான கறியை எடுத்துப் போக காத்துக் கிடந்தனர் கந்தல்-சிறுவர்கள். வழக்கம் போல வீணான பொருட்களை வாங்க, அவனுக்கு பணத்திற்கு தேவையாக இருந்தது. பணத்திற்காக இப்போது தானியங்கி கணக்கியலாளர் இயந்திரத்தின், அதாங்க Automatic Teller Machine - ATM மின் உதவி தேவைப் பட்டது. ஒரு அலுவலக வேலையாக லக்னோ வந்திருந்தான், வேலை முடிந்து மாலை ஏழுமணிக்கு ரயிலில் சொந்த ஊர் திரும்ப வேண்டும். புறப்படுவதற்கு முன் ஏதாவது வாஙக நினைத்து கடைத்தெருக்களில் சுற்றிக் கொண்டு இருந்தான். வழியில் எதிர்பட்டவரிடம் தனக்கு தெரிந்த ஹிந்தியில் விசாரித்தான்.
"பாயி, இதர் SBI-க்கா ATM கஹா ஹை?"
"command-க்கா சாம்னே ஏக் petrol bank ஹை, உதர் ஹை"
"தன்யவாத் பாய்"
இரண்டு மிதிவண்டிகாரர்களையும், ஒரு இராணுவ வீரரையும் வழி கேட்டு பங்கை அடைந்த போது, ATM-மின் வெளியே நீண்ட வரிசை காத்திருந்தது. மெல்ல போய் அந்த ஜோதியில் ஐக்கியமானான். வெகுநேரமாகியும் உள்ளே யாரும் போவதாகவும், வெளியேவருவதாகவும் தெரியவில்லை. இரண்டு பேர் ATM-மை பிரித்து மேய்ந்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். சரியென்று, சுற்றிலும் பார்வையை மேய விட்டான். அப்போது Honda Activa-வில் நீல நிற சேலையுடன் ஒரு பெண் வந்திரங்கினாள். அவளின் சேலைக்குத் தோதாக நீல நிறத்தில் காதணியும், கை வளையலும் அணிந்திருந்தாள். ஹை-ஹீல்ஸும் (இதுக்கு தாய்த் தமிழில் என்ன சொல்வார்கள்? மக்கள் தொலைக்காட்சிக்கு எழுதி கேட்கலாமா? ), தலைக் கவசமும் அணிந்திருந்தாள்.
அவளும் வந்து அங்கே நின்றிருந்த ஜோதியில் வந்து அவனுக்கு பின்னாக ஐக்கியமானாள். சிறிது நேரத்திற்கு பின் அவளிடம் அருகே உள்ள வேறு ஏதாவது ATM பற்றி அவன் விசாரித்ததில், எந்த ஒரு ATM-மிலும் பணம் வருவதில்லையெனவும், 'சர்வர் டவுன்' எனவும் சொன்னாள். இதைக் கேட்டவுடன் அவன் மனம், ' திக்'கென்றது. பர்ஸை (பணப்பை தமிழில்) எடுத்து பணத்தை பார்த்தான். நேற்று சார்-கஞ்சில் இருநூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கியது, அமர்-கஞ்சில் 'டுண்டாய் கபாப்' சாப்பிட்டது, 'சிக்கான்' போட்ட சட்டை வாங்கியது போக 'இருநூற்றி ஐந்து' ரூபாய் மீதியிருந்தது. இன்னும் செலவுகள் இருந்தன. அருகில் இருந்த ICICI வங்கியின் ATM-ல் முயற்சி செய்து பார்க்கலாம் என போனான். இயந்திரத்திடம் கார்டைக் கொடுத்தவுடன் அது, உள்வாங்கி, கடித்து, மென்று, தின்று பின் காரித் துப்பியது. கூடவே "SORRY, YOUR TRANSACTION FAILED" எனச் சொல்லி பல்லிளித்தது. என்ன செய்வது? மணி காலை 10.00. மாலை ஊர் திரும்பியாக வேண்டும். வாடிய முகத்துடன் தங்கியிருந்த அறைக்கு வந்தான். அதுவரை தன்கியிருந்த ஒருநாள் வாடகை, இரு வேளை உணவு சாப்பிட்டிருந்தான். வரவேற்பறையில் விசாரித்த போது "இருநூற்றுச் சொச்சம் பில் வரலாம்" எனச் சொன்னார்கள். ஏதெதோ சொல்லி, மதிய சாப்பாட்டைத் தவிர்த்து, ஒருவாறு சரி செய்து 185 ரூபாய் கொடுத்து விட்டு வெளியே வந்தான். பர்ஸில் இருந்த இருபது ரூபாயுடன், ATM கடன் அட்டை (debit card), பையில் தேடியதில் தேறிய ஏழு ரூபாய் சில்லரை மிச்சமிருந்தது.
அவன் தங்கியிருந்த அறையிலிருந்து, இரயில் நிலையம் சுமார் 5 கி.மீ தூரம் இருந்தது, கையில் ஒன்றும், பின்னால் ஒன்றுமாக இரண்டு பெரிய சுமைகளுடன் அவ்வளவு தூரம் நடப்பதென்பது இயலாத ஒன்றாகவே பட்டது. அவனுக்கு ரிக்ஸா மிதிப்பவனின் பின்னால் ஒய்யாரமாக உட்காந்துப் போவதில் உடன்பாடு இல்லையாதலால் எப்போதும் ரிக்ஸாவைத் தவிர்த்து விடுவான். ஆனால் இன்று வேறு வழியில்லை!. ஒரு ரிக்ஸாகாரனிடம் விசாரித்ததில் முப்பது ரூபாய்க்கு ஒரு பைசா குறைக்க முடியாது என கறாராக (இது தமிழ் வார்த்தையா?) சொல்லி விட்டான். காலையில் ஒன்றரை ஆலு பரோட்டா சாப்பிட்டது. மதியமும் ஒன்றும் சாப்பிடவில்லை. மயக்கம் வருவது போல இருந்ததால், கையோடு எடுத்து வந்திருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டான் வாயிலும், முகத்தின் மீதும். அப்போது ஒரு ரிக்ஸா ஏற்கனவே ஒரு பயணியுடன் அவனைக் கடந்துச் சென்றது. மனதில் ஏதோ தோன்ற அந்த ரிக்ஸாவை நிறுத்தி வினவினான். பின் ஒருவாரு 20 ரூபாய்க்கு அவனைச் சம்மதிக்க வைத்தான். இரயில் நிலையத்தில் அவனுக்கு கொடுத்த 20 ரூபாய் போக மீதமிருந்தது 7 ரூபாய். அன்று வழக்கமாக தாமதமாக வரும் ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தது. இரவு நேர சாப்பாட்டிற்கு பதில் ஒரு தேனீர் வாங்கிக் குடித்ததில் 5 ரூபாய் காலி!. மீதமிருந்தது ஒரெயொரு இரண்டு ரூபாய் நாணயம். அந்த 2 ரூபாய்க்கு எதுவும் வாங்க முடியாது எனத் தீர்மானமாக தெரிந்த பிறகு, இரயிலில் குப்பைகளைச் சுத்தம் செய்துக் கொண்டு வந்த கால் ஊனமுற்ற ஒரு பையனுக்கு அதைக் கொடுத்துவிட்டான்.

சுமார் 20 மணி நேர பயணத்திற்கு பின் சென்னை வந்திறங்கியபோது அவன் பர்ஸைப் போலவே அவனும் வாடி வற்றியிருந்தான். தூரத்தில் நீலநிறப் பின்புலத்தில் வெள்ளை நிறத்தில் 'STATE BANK ATM' என எழுதியிருந்தது. யாரோ ஒருவர் உள்ளேயிருந்து பணத்தை எண்ணிக் கொண்டே வெளியே வருவது மங்களாகத் தெரிந்தது. உடனே அவன் முகத்தில் ஒரு 1000 வாட்ஸ் பல்ப் எரிந்தது. அதன் எதிரிலேயே இருந்த இரயில்வே உணவகத்தைப் பார்த்ததும் 2000 வாட்ஸ் வெளிச்சம் பளிச்சிட்டது. அவனது பர்ஸும், அவனும் தன்னைப் பெருக்கிக் கொள்ளத் தயாரானார்கள்.
பி.கு - பதிவு முழுவதும் 'அவன்' என விளித்தது அடியேனைத் தான்!.