மிக்கி - மௌஸ் -online

Monday, February 09, 2009

நான் கடவுள்- படம் பற்றிய ஒரு பார்வை.


"அஹம் பிரம்மாஸ்மி" என்பதை மொழி பெயர்த்தால் "நாமே கடவுள்" என வரும். படத்தில் ஆர்யா-வை தவிர மற்ற அனைவருமே சராசரி மனிதர்கள் தான். அவர் மட்டுமே கடவுள் ஆதியும் அந்தமும் உணர்ந்தவர்... ஜோசியர்களின் பேச்சைக் கேட்டு தான் பெற்றெடுத்த மகனை 14 வருடங்கள் தன் பார்வைக்கு அப்பால் வளர்க்க வேண்டி காசியில் விட்டு விட்டு பின் அவனை தேடி காசி வருகிறார் அப்பா தனது மகளுடன். பிணத்தின் முன்னால் அமர்ந்து ஸ்லோகங்கள் சொல்லி இறந்தவர்களுக்கு மோட்சம் அளிக்கும் ஒரு 'அகோரி'யாக சாதுக்களால் வளர்க்கப் பட்ட தன் மகன் ருத்ரனைக் கண்ட மாத்திரத்தில் மயங்கி விழுகிறார் அப்பா. அவனை ஒருமுறை ஊருக்கு கூட்டிப்போய் அவன் அம்மாவிடம் காட்டுவதற்காக மகனை வளர்த்த சாதுவிடம் அனுமதி வாங்கி ஊருக்கு கூட்டி வருகிறார். திரைக்கதை கங்கைக் கரையிலிருந்து, தென் தமிழ் நாட்டிலுள்ள மலைக்கோவில் நகருக்கு திரும்புகிறது.
கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைகாரர்களை கொண்டு பணம் பார்ப்பவன் தாண்டவன். ரயில் பாட்டு பாடி பிச்சை எடுக்கும் பிச்சைக்காரியாக அம்சவள்ளி, நம்ம பூஜா தான். சந்தர்ப்ப வசத்தால் தான் இருந்த இடத்திலிருந்து பிரிந்து வந்து தாண்டவனிடம் சேருகிறார். அவரையும் மேலும் சில 'உருப்படி'-களையும் வைத்து 'தொழில்' செய்யும் இரண்டாம் நிலை முதலாளி, முருகன், நல்லவன், கடவுள் பக்தி உள்ளவன். மற்ற பிச்சைகாரர்களை உறவினர் போல் பாவிப்பவன். இந்நிலையில் ஒரு மலையாள முதலாளியின் அறிவுரையின் பேரில் உருப்படிகளை கேரளாவிற்கு எக்ஸ்சேஞ் செய்கிறான் தாண்டவன். மலையாள முதலாளி ஊனமுற்றவர்களை தூக்கிப் போவது கண்டு, அனுமார் வேடமணிந்த ஒரு கால் ஊனமுற்ற சிறுவன் ஓடி ஒளிவது, நெஞ்சை கசக்குவது போலிருந்தது. உச்ச கட்டமாக, முகம் முழுவதும் தீயில் வெந்து போன ஒருவனுக்கு, அம்சவள்ளியை 3 லட்சத்துக்கு விற்க முற்பட, அவள் போய் ருத்ரனிடம் தஞ்சம் அடைகிறாள். அவளை காப்பாற்றும் ருத்ரன், மலையாள முதலாளியை கொல்ல, போலீஸ் அவனை கைது செய்கிறது. பின் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போகவே ருத்ரன் விடுவிக்கப் படுகிறான். வெளியே வரும் ருத்ரனை தாண்டவன் கொலைவெறியுடன் தாக்க அவனது கதையும் முடிக்கிறது. தாண்டவனால் துன்பப்பட்ட அம்சவள்ளி தன்னை துன்பத்திலிருந்து விடுவிக்குமாறு ருத்ரனிடம் முறையிட அவளை உலகத்திலிருந்து விடுவித்து ருத்ரன் காசி திரும்புவதுடன் படம் முடிகிறது.
காசி அவ்வளவு அழகாக இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் முதல் பத்து நிமிடங்களுக்கு கங்கையையும் காசியையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆர்த்தர் வில்சன். "பாவிகளுக்கு நான் அளிக்கும் மரணம் தண்டனை, துன்பப்படுபவர்களுக்கு நான் அளிக்கும் மரணம் விடுதலை" என தத்துவம் பேசும் இடத்தில் மிளிர்கிறார் ஆர்யா, பாலா-பட்டறையில் பட்டை தீட்டப் பட்ட மற்றுமோர் வைரம். கோயில் வாசலில் பிச்சை எடுப்பவர்களின் வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறார் பாலா, சபாஷ். இயந்தர தனமான மனிதர்கள் வடக்கில் தான் உண்டு என்ற எனது எண்ணத்தை பொடியாக்கி, இதயமில்லாதவர்கள் எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றனர் என உணர வைத்திருக்கிறார். பிச்சைக்காரர்களின் அவல நிலையை பறைசாற்ற "பிச்சை பாத்திரம்" பாடல் ஒன்றே போதுமானது. இசை ஞானிக்கு ஈடு இணையும் உண்டோ!. உடல் ஊனமுற்றோரின் உலகத்தையும், அவர்களிடையேயான பாச பிணைப்பையும், அன்பையும், இரக்க குணத்தையும் இவ்வளவு யதார்த்தமாக படம் பிடித்த எந்த தமிழ் படமும் எனக்கு தெரிந்து இல்லை. பூஜா அம்சவள்ளியாக மிளிர்கிறார். படத்தின் காட்சிக்கு காட்சி பாலாவின் முத்திரையே. படத்துக்கு ஒரு அவர்டேனும் நிச்சயம்!.