ஃபேஷன்- ஒரு (விரிவான) கண்ணோட்டம்
ப்ரியங்கா சோப்ரா (P.C), கங்கனா ரெனவத், மகத கோஷ் நடித்து வெளிவந்திருக்கும் ஹிந்தி திரைப்படம். இதில் மூன்றாமவர் நிஜ மாடல். இப்படம் P.C-ன் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்றால் அது மிகையாகாது. CA படிக்க சொல்லும் அப்பாவை எதிர்த்துக் கொண்டு, மாடல் ஆகும் கனவோடு மும்பய் வரும் ஒரு பெண்ணின் கதை. ஃபேஷன் உலகத்தின் வெளியே தெரியாத பல விசயங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். ஃபேஷன் உலகில் பெரும்பாலும் காணப்படும், ஓரின டிசைனர்களாகட்டும், மாடல்களின் மத்தியில் இருக்கும் மது, சிகரெட் பழக்கங்கள், பார்டிகளுக்காக மாடல்களுடன் டேட்டிங் போகும் பணக்காரர்கள், வாய்ப்புக்காக 'எதையும்' செய்யும் மனோபாவம், போன்ற ஃபேஷன் உலகின் மறுபக்கத்தை, அதன் முகத்திரையை கிழித்துக் காட்டியிருக்கிறார்கள். 'ஷோ டாப்பர்'களாக வரும் பெரும் மாடல்களில் ஒருவர் தான் கங்கனா (சோனாலி) அகங்கார மனப்போக்கு, ஹை-பை வாழ்க்கை, போதைப் பழக்கங்கள் உடையவர். மாடல் ஆகத் துடிக்கும் struggler P.Cயின் ரோல் மாடல். சில மாதங்களுக்கும் முன் மும்பை தெருக்களில் 'பைத்தியமாக' அடையாளம் காணப்பட்ட முன்னாள் மாடல் கீதாஞ்சலி நாக்பாலின் ரோலைச் செய்திருக்கிறார், இல்லை வாழ்ந்திருக்கிறார்.
வாய்ப்புக்காக போராடும் struggler-ஆக இருக்கும் போது பரிச்சயப் படும் ஒரு சக ஆண் மாடலுடன் காதல், பின் ஒரே அப்பார்ட்மென்ட்டில் வாசம் (living relationship), பின் வாய்ப்புகளுக்காக ஒரு டிசைனருடன் கள்ளத்தனமான உறவு, டாப் மாடல் ஆன பின்பு, போதைக்கு அடிமையாகி தன் அகங்காரத்தால் வாய்ப்புகளை இழந்து ஒருவழியாக வீட்டுக்கு திரும்புகிறார் P.C. அங்கே அப்பாவின் அறிவுரைப் படி பின் மீண்டும் ஃபேஷன் உலகம் திரும்புகிறார் பிரியங்கா, அவர் சாதித்தாரா இல்லையா என்பது தான் மீதிக் கதை!. ஃபேஷன் உலகில் நுழைத்துடிக்கும் யுவதிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம், நம்ம ஊர் பரவாயில்லை, வடக்கில தான் மாடல் ஆக நிறைய பேர் வெறியா இருக்காங்க. பாதிப் பேர் இங்கிலீஷ் பேசரதனால இந்தி தெரியலைனாகூட படத்தை பாக்கலாம். ஒரு படத்தின் கதாநாயகி மூன்று பேரிடம் கெட்டு முன்னேறுவது மாதிரி ஒரு தமிழ் படம் எடுக்க யாருக்காவது இங்க 'தில்' இருக்கா!!