மனமென்னும் மாயத்தோற்றம்!
மனிதன் (மனுசன்) என்னும்
படம் மனஸ் (மனது) என்ற பதத்திலிருந்து வந்ததே! ஆக மனம் இருப்பவன் தான் மனிதன்
என்றாகிறது. அப்படியெனில் விலங்குகளுக்கு மனம் இல்லையா? இதற்கான பதிலை விலங்குகள்
தான் அறியும்.
மனம் இருப்பதை நாம் எவ்வாறு
அறிகிறோம்? இதென்ன கேள்வி என்கிறிர்களா ... அது தான் காலை முதல் இரவு வரை non-stopஆக
ஓடிக் கொண்டிருக்கிறதே! உண்மைதான். கொஞ்சம் ஆழமாக பார்த்தால் மனதில் ஓடுவது
எல்லாமே பெரும்பாலும் நமக்கு நேர்ந்த சம்பவங்களாகவும் அல்லது அது குறித்த
எண்ணங்களாகவுமே இருக்கும். இவ்வாறு நடந்த நிகழ்வுகளை தான் மனமானது ஓயாமல் replay
செய்து காட்டுகிறது. இதில் 90 % எண்ணங்கள் நேற்று வந்தவையே மீண்டும் மீண்டும்
வருகின்றன என்பது தான் வேடிக்கையே...
இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்து பார்ப்போம். உங்களுக்கு
எப்போது மனம் என்ற ஒன்று இருப்பது தெரிந்தது. சுமார் மூன்று அல்லது நான்கு
வயதிலிருந்து இருக்கலாம். ஆக உங்களின்
முதல் நினைவுகளிலிருந்து மனம் உருவாகி இருக்கலாம். அல்லது நீங்கள் முதன் முதலில்
நினைவுகளை சேமிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த மனமானது நமக்கு உள்ளே ஓடிக்
கொண்டிருக்கிறது.
இதை தான் “வேகம் தடுத்தாண்ட வேந்தனடி போற்றி” என்றார்
மாணிக்க வாசகர்.
நம் உடலானது எவ்வாறு சிறுவயதிலிருந்து நாம் சாப்பிட்ட உணவை
சேர்த்து வைத்து வளர்ந்ததோ, அவ்வாறே
மனமானது நாம் கண்ட, கேட்ட, அனுபவபட்ட நிகழ்வுகளை சேர்த்து வைத்து வளர்ந்துள்ளது
என்பதே நிதர்சனமான உண்மை.
நம்முடைய அனுபவங்களைஎல்லாம் pdf புத்தகங்கள் என்று எடுத்துக் கொண்டால், மனம்
என்பது pdf reader போன்றது என கொள்ளலாம். இங்கே பிரச்சனை என்னவென்றால் இந்த reader ஆனது non stop ஆக எல்லா புத்தகங்களையும் திறந்து
காட்டிக் கொண்டே போவது தான். நமது மொபைல் போனில் back ground அப்ளிகேசன்கள் பேட்டரியை
காலி செய்வதை போல இந்த மனமானது பெருமளவு சக்தியை வீணாக்கிவிடுகிறது.
ஆனால் இவ்வாறு அது ஓபன் செய்யும் புத்தகங்கள் ஏனோ தானோவென
தோன்றினாலும், அடிப்படையில் அதில் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. ஒரு எண்ணத்திலிருந்து
தான் அடுத்த எண்ணம் பிறக்கிறது அல்லது link கிடைக்கிறது. ஆக எல்லா புத்தகங்களும்
ஒரு chain போல திறந்து காட்டப்படுகின்றன. இந்த link-ஐ அல்லது chian-ஐ உடைப்பதன்
மூலம் நாம் நம்முடைய மனவோட்டத்தை தடுக்கவோ, அல்லது தடம் மாற்றவோ முடியும்.
இவ்வாறாக மனமானது book-ஐ
open செய்து படித்துக் கொண்டே போகும் போது வேறு ஏதோ ஒன்று அதை கட்டுப்படுத்த
முயல்கிறது. அல்லது ஒழுங்கு படுத்தவும் செய்கிறது. அது என்ன? அதை மிகச் சாதாரண
மொழியில் சொல்வதானால் “புத்தி”, ஓஷோவின் மொழியில் சொல்வதானால் “விழிப்புணர்வு” (consiousness),
ரமணர் வழி சொல்வதானால் அது தான் “நான்” அல்லது “ஆத்மா”. அப்பாடா எப்படியோ வந்து
சேர்ந்தாகிவிட்டது.ஆத்மாவை விளக்கியாகிவிட்டது.
நம் தமிழ் நாட்டில் நாம் மறந்துவிட்ட ஒரு பாரம்பரிய கலை, “அவதானக்
கலை”. ‘போராளி’ திரைப் படத்தில், ஹீரோ தனது சின்ன வயதில் ஒரே சமயத்தில் பல
நிகழ்வுகளை கவனித்து நினைவில் வைத்துக் கொண்டு பின்பு அதை திரும்ப சொல்வாரே அந்த
கலைதான். அப்படி என்ன செய்வார்கள் இந்த அவதானக் கலையில்? ஒரே சமயத்தில் பல
நிகழ்வுகளை (சுமார் 100 நிகழ்வுகள் வரை) நினைவில்
நிறுத்தி பின்பு வேண்டும் வரிசையில் நினைவு படுத்தும் கலை தான் இது. ஒரு விதத்தில்
மனதை வைத்து செய்து காட்டும் ஒரு வித்தை எனலாம். இத்தனை விசயத்தை எப்படி நினைவில்
கொள்ள முடியும்?. அவர்களை கேட்டால் அது ரொம்ப சிம்பிள், எல்லா புத்தகங்களையும் தனி
தனி folder-ல் போட்டு வைத்துவிட வேண்டும்.வேண்டும் போது வேண்டிய புத்தகத்தை
திறந்து பார்த்து படிக்க வேண்டியது அவ்வளவுதான். சொல்வதற்கு எவ்வளவு எளிதாக
உள்ளது. உண்மையில் முயன்றால் செய்வதற்கும் எளிதானது தான். ‘கவனகர் கனக
சுப்புரத்தினம்’ என்பவர், கல்வியறிவில்லாமல் வீதி வீதியாக சென்று ஐஸ் விற்று வந்தார்.
தன் பார்வையற்ற தந்தையின் மறைவிற்கு பின், அவர் போற்றி வளர்த்து வந்த அவதானக்
கலையை பற்றி தெரிந்துக் கொண்டு பின் தானாகவே அக்கலையை கற்று தேர்ந்தார் அதுவும்
குறுகிய காலத்தில்.
ஞானிகளும் யோகிகளும் இந்த pdf reader ஆகிய மனதை எப்போது
வேண்டுமோ அப்போது on செய்யவும், வேண்டாத போது off செய்யவும் தெரிந்து
வைத்திருக்கின்றனர். இதை தான் உண்மையில் “சும்மா இருக்கும் சுகம்” என விளித்தனர்.
வைகை புயல் ஒரு படத்தில் அரச மரத்தடியில் சும்மாவே இருப்பாரே அது போல சும்மா
இருப்பதல்ல. இந்த சுகம் எல்லோரும் அடையக் கூடிய ஒன்று தான். என்ன கொஞ்சம் கஷ்டப்பட
வேண்டும் அவ்வளவே! இந்த இணைய உலகில் இதற்குண்டான வழிகள் பல உள்ளன. ஒரு காலத்தில்
காயத்திரி மந்திரத்துக்கு விளக்கம் வேண்டுமெனில் ஒரு ஞானியையோ, வேதம் படித்தவரையோ
தேடி சென்று, அவருக்கு சமயம் இருக்கும் போது கேட்டு தெரிந்து கொள்ள
வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ விக்கிபீடியா சுமார் பத்து பேரின் வித விதமான
அர்த்தங்களை நொடி நேரத்தில் தந்து விடுகிறது. உண்மையில் இணையமானது மனதின் வேகத்தை
பன்மடங்கு உயர்த்தி விட்டது என்றே சொல்லவேண்டும் . எல்லாப் புகழும் கூகிளு-க்கே!
முதல்முறை ரயிலேறும் போதோ, விமானம் ஏறும் போதோ அல்லது
சுற்றுலா தளங்களுக்கு போகும் போதோ உள்ள மனமகிழ்ச்சி மறுமுறை செல்லும் போதோ அல்லது
மீண்டும் மீண்டும் செல்லும் போதோ ஏற்படாததற்கு காரணம் இந்த பழைய நினைவுகளை மனமானது
மிக விரைவில் சலித்து போகிறது அல்லது புதிது புதிதாக அனுபவத்திற்கு தன்னை
தயார்படுத்திக் கொள்கிறது. அந்த புதிய அனுபவமும் ஓரிரு முறையில் சலித்துப்
போகிறது.
ஒருத்தருக்கு தாஜ்மகால் முதன் முறையாக கொடுத்த ஆனந்த
அனுபவம் அங்கே டூரிஸ்ட் கைடாக வேலை செய்பவனுக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்குமா
என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல தோன்றுகிறது. ஒரே தாஜ்மகால், தேன்நிலவு வந்த
ஜோடிக்கும், அடுத்த டெல்லி ரயிலுக்கு அரை மணிநேரமே இருக்க ஆக்ரா வந்த ஒருவருக்கும்
வெவ்வேறு அனுபவத்தை தருவது எப்படி?
ஆக ஆனந்தம் என்பது பார்க்கும் பொருளிலோ, இடத்திலோ
இல்லையென்பதும் பார்க்கும் மனநிலையில் தான் ஆனந்தம் என்பது உள்ளது என்பதும் தெளிவாகிறது.
முதல்முறை பெற்ற அனுபவத்தை மீண்டும்
மீண்டும் அனுபவிக்க இயலாதா? என்ற கேள்விக்கு நீங்கள் உங்கள் பழைய நினைவுகளை அழிக்க
முடிந்தால் அது சாத்தியமே என்பது யோகிகளின் நம்பிக்கை.
எங்கோ கேள்விபட்டது, கட்டுப்பாடு இல்லாத வயிற்று போக்கை
தடுக்க வேண்டுமெனில் நாம் சாப்பிடுவதை கவனித்து, கட்டுப்படுத்தி சாப்பிட வேண்டும்.
இது போல மனதின் வயிற்றுப் போக்கை தடுக்க மனதில் உள்ளிடும் எண்ணங்களை கவனித்து
மாற்றம் செய்ய வேண்டும். ரமணரின் கூற்றுப்படி இவ்வாறாக எண்ணங்களின் மூலத்தை,
அதாவது மனதை அவதானிக்க மனம் என்ற ஒன்று மறையும் அல்லது மனம் என்பது மாயம் என்பது
விளங்கும். இதுவே தியானத்தின், யோகத்தின் அல்லது ஞானத்தின் முதல்படியாகவும்
பார்க்கப் படுகிறது.
நம்மால்
மனதை கடக்க முடியாவிட்டாலும் எண்ணங்களை கையில் எடுப்பதன் மூலம் மனதையும்,
மனவோட்டத்தையும் நம் கையில் எடுக்கலாம். நல்ல எண்ணங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம்
நல்வழியில் மனதை திசை திருப்புவதன் மூலம் நம் செயல்களையும், அதன் மூலம் நம் பழக்க
வழக்கங்களையும், அதன் மூலம் நம் குண நலன்களையும் கடைசியாக நம் விதியையும்
தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு உள்ளதாகவே படுகிறது.