பறவைகள் பலவிதம் - 2 கண்ணாடி அப்பா....
அனைவரும் பார்த்தாலே பயந்து நடுங்கும் அளவுக்கு அவரது தோற்றம் இருக்கும் பெரிய கண்ணாடி போட்டிருப்பார். புல்லட் இந்தியாவில் அறிமுகம் செய்தகாலத்தில், எங்கள் மாவட்டதிலேயே முதல் முதலாக போய் வாங்கி வந்தவர். ரிடயர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர், அதற்கு முன் பட்டாளத்தில் வேலை பார்த்தவர், இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவரை போய் கடைசி நேரத்தில் போர் முடிவுற்றதால் போரிடாமலேயே திரும்ப வந்தவர். அவர் பட்டாளத்தில் போய் சேர்ந்தது வேறு ஒரு கதை. ஒரு நாள் ஸ்கூலுக்கு மட்டம் போட்டுவிட்டு வழக்கம் போல சினிமாவுக்கு போனதால் வீட்டில் பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. அதனால் வீட்டை விட்டு ஓடிப்போய் பட்டாளத்தில் சேர்ந்தார். 1946 போலீஸாக வேலை பார்த்தபோது, ஒரு ஹாஸ்பிட்டலில் வேலை பார்த்து வந்த நர்ஸை புரட்சி செய்து காதல் திருமணம் புரிந்தவர். அவர் வேலை பார்த்த காலத்தில் அவரால் பயனடைத்தவர்கள் ஏராளம், தனது தம்பிக்கு டிபார்ட்மென்ட்டில் வேலை வாங்கித் தந்தார், பல பேருக்கு தன் சொந்த பணத்தில் ஆட்டோ வாங்கி தந்தார். தனக்கு வந்த பணம் எதையும் நாளைக்கென்று சேர்த்து வைக்காமல், 'இல்லை' என்று வந்தவர்களுக்கு கொடுக்கவும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு செலவு செய்யவும் செலவிட்டார். தான் பணி-ஓய்வு அடைந்த பின்னும், மிலிட்டரி கேன்டினில் இருந்து பொருட்கள் வாங்கி வந்து தெருவில் உள்ள அனைவருக்கும் கொடுப்பார்.
அவரால் சும்மா மட்டும் இருக்க முடியாது, காலை 4 மணிக்கே எழுந்து அனைத்து பணிகளையும் செய்வார், வாசல் கூட்டுவது முதல், தண்ணீர் பிடிப்பது வரை அவரது பணிகளாயின. பகல் முழுவதும், பக்கத்தில் உள்ள நிலத்தை சுத்தம் செய்வது, எதாவது செடி நடுவது என உழைத்துக் கொண்டே இருப்பார். மாலை 4 மணியானால், வாக்கிங் புறப்பட்டு விடுவார், கையில் வாக்கிங் ஸ்டிக்கோடு, அவர் போகும் வழியில் ஒரு பெண்கள் மேல் நிலைப் பள்ளி இருப்பதால், அந்த பள்ளியில் படிக்கும் பெட்டைகள், தாத்தா தினமும் 'சைட்' அடிக்கத் தான் இந்த வழியாக வருவதாக அவர் காது படவே பேசுவார்கள். ஆனால் அவர் எதையும் கண்டுக் கொள்ளமாட்டார். நடந்து போய் அந்த ரோட்டின் மூலையில் உள்ள டீக்கடையில் அமர்ந்து ஒரு டீ சாப்பிட்டு விட்டு, ஒசியில் மாலைமுரசு படித்து விட்டு வராவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. அவர் சம்பாதித்ததில்லாம் செலவு செய்துவிட்டதால் அவருக்காக அவரது மகன் ஒரு வீடு கட்டி கொடுத்திருந்தார். அந்த வீட்டை தன் கண்ணிலும் மேலாக பராமரித்து வந்தார். அதன் ஒவ்வொரு அங்குலமும் அவருக்கு அத்துபடி, கிரில்லுக்கு பெயிண்ட் அடிப்பது, மொசக் மீது பெயர்ந்து வந்துவிட்ட கற்களுக்கு சிமென்ட் பூசுவது, ஷோ-கேசை சுத்தம் செய்து வைப்பது என நாள் முழுவதும் வேலை செய்வார், அவருடைய பெரிய ஏமற்றம், அவரின் மகள் வீட்டு பேரன், மிலிட்டரி ஸ்கூலில் சேராமல் போனது தான், அதற்காக அவனை சுமார் 2 வருடங்களாக தயார் செய்து வந்தார். அதனால் என்ன? அவரின் மகன் வீட்டில் இருந்து ஒரு ஆர்மி ஆபிசர் உருவாகிவிட்டார்.இதுவும் அவரது முயற்சியாகவே இருந்தது. கடவுள் நல்லவர்களை கைவிடுவதில்லை. தினமும் காலை எழுப்பிவிடுவதில் தொடங்கி, அவனின் ஒவ்வொரு அசைவயும் சரி படுத்தி அவனை போட்டித்தேர்வில் பாஸ் செய்ய வைக்க அவர் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சியும் அளவிட முடியாது.
இப்படி இருந்தவருக்கு, நுரையீரல் புற்றுநோய் என மருத்துவர்கள் கூறி விட்டனர். அவருக்கு அனைத்து இலவச மருத்துவமனைகளும் அத்துபடி, ஏனென்றால் முன்பு தனது வீட்டில் வேலை பார்த்து வந்த வேலைக்கார பெண்ணிற்கு இருந்த இருதய ஓட்டையை புட்டபர்த்தி வரை சென்று அடைத்து, அவளுக்கு திருமணமும் செய்து வைத்திருந்தார். அவரின் மகன் வீட்டு பேரன்கள் இருவருமே மருத்துவம் படித்து டாக்டர் ஆகிவிட்டனர். அதுவும் அவரின் தூண்டுதலினாலேயே. தனது வைத்தியச் செலவுக்காக மகன் பணம் செலவு செய்வதை விரும்பாமல், தன்னால் நடக்கமுடியாத சூழலிலும் பஸ்பிடித்து காஞ்சீபுரம் சென்று இலவச வைத்தியம் செய்துக் கொள்வார். அவருக்கு ஒரு டாக்டர் சொன்ன மருந்தை அமெரிக்காவிலிருந்து வரவழைத்து கொடுத்துக் கொண்டு இருந்தனர். அதிலும் பாதியை தனது பெட்டுக்கு அடுத்த பெட்காரரான அவரது 'நண்பருக்கு' (அப்படித் தான் அவர் அழைப்பார்) கொடுத்து விடுவார். நட்ப்புக்கு இலக்கணமாக விளங்கிய இருவரும் சிறிது கால இடைவெளியில் இறந்து போயினர். ஆனால் அவர்கள் உருவாக்கிய நட்பு மட்டும், சாதி மத வேறுபாடுகளைத் தாண்டி இன்னும் இரு குடும்பங்களுக்கு இடையே இருக்கிறது, அந்த நட்பு அவர் கொடுத்து விட்டு போன சொத்து. இறக்கும் தருவாயில் அவர் சொன்னது, "ஒரு மனிதன் சாகும் போது, எதையும் கொண்டுச் செல்வதில்லை, அவனால் செய்ய முடிந்ததெல்லாம் தன்னால் முடிந்த உதவியை பிறருக்கு தவறாமல் செய்ய வேண்டும்" என்று சொன்னதோடு நில்லாமல், சாகும் தருவாயிலும் அனைவரையும் குறிப்பாக வயதில் சிறியவர்களை அழைத்து, உண்மையாக இருப்பது குறித்தும், உதவிகள் செய்வது குறித்தும், உழைப்பின் மேன்மை குறித்தும் புத்திமதிகள் சொல்வார். ஏன் எனக்கேட்டால், 'சாகப் போகிறவன் சொன்னால் அதற்கு மதிப்பு அதிகம்' எனச்சொல்வார். யார் சொன்னார்கள் மனிதநேயம் செத்துவிட்டதென்று கண்ணாடியப்பா வோடு. அது இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. கண்ணடியப்பா இன்றும் வாழ்கிறார் அவர் உருவாக்கிய டாக்டர்கள் மூலம், ஆர்மி ஆபிசர்கள் மூலம், வாழவைத்த வேலைக்கார பெண்ணின் மூலம் அவரால் பயனடைந்த இன்னபிற மனிதர்கள்மூலம்.